நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்டால் விவசாயிகள் வாட்ஸ்அப் மூலம் புகார் கொடுக்கலாம் | Farmers can file complaints through WhatsApp if anyone asked for bribes

1351104.jpg
Spread the love

தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர், உயர் அதிகாரிகள் மற்றும் 24 மணி நேர உழவர் உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக (டிஎன்சிஎஸ்சி) மேலாண்மை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 2,600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு தினமும் சுமார் 12,800 விவசாயிகளிடம் இருந்து 60 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இதில், சில நிலையங்களில் விவசாயிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வருவதால் பல்வேறு நடவடிக்கைகளை டிஎன்சிஎஸ்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. 2025-ம் ஆண்டில் இதுவரை புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, விலாப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, இலுப்பைவிடுதி ஆகிய இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்ததை அடுத்து, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, யாருக்கும் நெல் விவசாயிகள் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. புகார்கள் எதுவும் இருந்தால், சென்னை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் உழவர் உதவி மையத்தை 1800-599-3540 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மண்டல மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் செல்போன் எண்களும் விவசாயிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதிலும் புகார் தெரிவிக்கலாம்.

புகார்கள் வருவதை தடுக்கும் விதமாக, டிஎன்சிஎஸ்சி கூடுதல் பதிவாளர் நிலையில் பிரத்யேக கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவரது கட்டுப்பாட்டில் 8 குழுக்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஒரு தரக் கட்டுப்பாடு அலுவலர், ஒரு கண்காணிப்பு அலுவலர் உள்ளனர். இக்குழுவுக்கு வரும் புகார்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்தப்படுகிறது.

எனவே, மேற்கண்ட எண்களுக்கு வாட்ஸ்-அப் மூலமாகவோ, நேரிலோ தெரிவிக்கலாம். டிஎன்சிஎஸ்சி மேலாண்மை இயக்குநரின் 9445257000 என்ற செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலமாக மட்டுமே புகார் அளிக்கலாம். புகாருக்கு ஆதாரமாக உள்ள ஆவணங்கள், காணொலிகளையும் பதிவிடலாம். புகார்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், தற்காலிக, பருவகால பணியாளர்கள் உடனடியாக நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள். நிரந்தர பணியாளர்களாக இருந்தால் இடைநீக்கம் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *