தஞ்சாவூர்: “விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம்.” என தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பார்வையிட்டு இன்று காலை ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகம். தஞ்சாவூர் மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த ஆண்டு 299 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதுவரை 1.06 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆயிரம் மெ.டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது.
இந்த ஆண்டு சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. தினமும் 1,250 லாரிகளில் வெளி மாவட்டங்களுக்கு நெல்மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் ரயில் வேகன்கள் மூலமும் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 16 லட்சம் சாக்குகள் கையிருப்பு உள்ளது. இன்னும் 66 லட்சம் சாக்குகள் வரவேண்டியுள்ளது. சணல் இருப்பும் போதிய அளவில் கையிருப்பு உள்ளது.
விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம்.
அதாவது 100 கிலோ அரிசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை மாற்றி கடந்த 29-7-2025 அன்று மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்தது. பின்னர் டெண்டர் விடப்பட்டு 5 ஒப்பந்தக்காரர்கள் மூலம் விவசாயிகளிடம் பெறப்பட்ட 34 ஆயிரம் டன் நெல்கள் வாங்கிய நிலையில் அவற்றில் 100 கிலோ அரிசிக்கு 1 கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டியுள்ளது. இதற்காக அந்த ஒப்பந்ததாரர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு அரிசியை அனுப்பியுள்ளனர்.
டெல்லியில் உள்ள குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரிகள் அதனை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்து அவர்கள் அறிக்கை தந்த பிறகு தான் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க முடியும். இதுவரை மத்திய அரசிடம் இருந்து அந்த அனுமதி வரவில்லை. அனுமதி வந்த பிறகு செறிவூட்டப்ட்ட அரிசி கலக்கப்பட்டு விடும். எனவே நெல் மூட்டைகள் தேங்கியது. இதற்கு மத்திய அரசுதான் காரணம். இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி ஏதேதோ பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
செறிவூட்டுதல்: ‘நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்தும் வகையில், தேவையான நுண்ணூட்டச் சத்துக்களின் உள்ளடக்கத்தைத் திட்டமிட்ட வகையில் அதிகரிப்பதே’ செறிவூட்டல் என இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) வரையறை செய்துள்ளது. இந்த அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி-12 ஆகிய ஊட்டச்சத்துகள் செயற்கையாக ஏற்றப்படும்.
வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல நுண்ணூட்டச் சத்துப்பொருள்கள் கொண்ட செயற்கையான செறிவூட்டும் கலவை (பிரிமிக்ஸ்) இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கலவையும், மாவாக்கப்பட்ட அரிசியும் சேர்க்கப்படும். பிறகு, இந்த மாவு அரிசி வடிவில் மீண்டும் இயந்திரங்களில் வார்த்தெடுக்கப்படுகிறது. சாதாரண அரிசியுடன் 100:1 என்ற விகிதத்தில் இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் கலக்கப்படுகின்றன.