வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
இமயமலையின் சிகரங்களுக்கு இடையே அமைதியான தேசம் நேபாளம், இன்று ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. இந்தியா மற்றும் சீனா என இரு பெரும் நாடுகளுக்கு இடையே நிலப்பரப்பால் சூழப்பட்டிருந்தாலும், நேபாளம் எப்போதும் தனது தனித்துவமான அடையாளத்தை விட்டுக் கொடுத்ததில்லை.
பல ஆண்டுகளாக மன்னராட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் குழப்பங்களில் சிக்கித் தவித்த இந்த நாடு, தற்போது “மாற்றம்’ என்ற ஒற்றைச் சொல்லின் பின்னால் அணிவகுத்து நின்று இளைஞர்களின் கைகளுக்கு அதிகாரம் நகரத் தொடங்கியிருக்கிறது.
நேபாளத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதன் வீரமும் துணிச்சலும் நமக்குப் புரியும். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தெற்காசியாவையே ஆக்கிரமித்திருந்த காலத்தில், தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காத மிகச் சில நாடுகளில் நேபாளமும் ஒன்று. 1768-ல் மன்னர் பிரித்வி நாராயண் ஷாவால் ஒருங்கிணைக்கப்பட்ட நேபாளம், சுமார் 240 ஆண்டுகள் ஷா வம்சத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது.
இமயமலையின் கடினமான நிலப்பரப்பும், உலகப்புகழ் பெற்ற கூர்க்கா வீரர்களின் அசாத்திய துணிச்சலும் அந்நாட்டைப் பிற சக்திகளிடம் இருந்து பாதுகாத்தன.
இருப்பினும், நேபாளத்தின் உள்நாட்டு அரசியல் எப்போதும் சீராக இருந்ததில்லை. மன்னர்களுக்குத் தெரியாமல் ‘ராணா’ குடும்பத்தைச் சேர்ந்த ஜங் பகதூர் ராணா அதிகாரத்தைக் கைப்பற்றி, பல ஆண்டுகள் ராணாக்கள் நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.