ஒடிசா கல்லூரியில் நேபாள மாணவி சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த உண்மை கண்டறியும் உயர்நிலைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
மேலும், நேபாள மாணவி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தடியடி நடத்தி விரட்டியதாக ஒடிசா கல்லூரியின் ஊழியர்கள் 3 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புவனேஸ்வர் மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்த நேபாளத்தைச் சேர்ந்த ப்ரகிரீத்தி லாம்சல் என்ற மாணவி, கடந்த பிப். 16 ஆம் தேதி மாலை அவரது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தக்கோரி அக்கல்லூரியில் பயிலும் 500க்கும் அதிகமான நேபாள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து மாணவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த விவகாரம் நேபாள அரசு கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, அரசு சார்பில் இரு அதிகாரிகள் ஒடிசா கல்லூரிக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனிடையே மாணவர்கள் மீது தடியடி நடத்தி வெளியேற்றிய மற்றும் கட்டாயப்படுத்தி விடுதியில் இருந்து அப்புறப்படுத்திய கல்லூரிக் காவலர்கள் இருவரை நிர்வாகம் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளது. இதோடு மட்டுமின்றி கல்லூரியில் பணிபுரிந்துவந்த 3 ஊழியர்களையும் காவல் துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கல்லூரி நிர்வாகம், மாணவர்களிடம் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதிலுமிருந்துவரும் மாணவர்களுக்கு கலாசார உள்ளடக்கம், மரியாதை மற்றும் அக்கறை என வீடு போன்ற உணர்வைக் கொடுக்கவே கல்லூரி நிர்வாகம் முயற்சிக்கிறது. சமீபத்தில் நடந்த சம்பவத்துக்கு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
நேபாள மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு, கண்ணியம், ஒழுக்கம் ஆகியவற்றை பாதுகாப்போம் என்ற மீண்டும் உறுதி கூறுகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததா? மாணவர்களே எச்சரிக்கை