சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் நேரடி நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்தோடு, பல ஆண்டு காலத்துக்கு முந்தைய வங்கி வழக்கு ஒன்றை தூசு தட்டி எடுத்து, அதை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் மத்திய அரசின் அமலாக்கத் துறை தோற்றுப்போனது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மேற்கொண்டுள்ள முயற்சிதான் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனம் குறித்த நேற்றைய கடிதம்.
2,569 பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கடந்த 2024 பிப்.2-ம் தேதி அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டன. இதற்கென தனி இணையதளம் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் 2 லட்சத்து 499 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர் பல்கலைக்கழகத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதி அடிப்படையில் அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் நடத்தி, மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு முறையில் 2,538 பேர் தேர்வாகினர்.
இந்த நேரடி நியமனம் குறித்து தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள், தடையாணைகளை உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 4-ம் தேதி ரத்து செய்த நிலையில், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இதற்கு களங்கம் கற்பிக்கும் வகையில், அமலாக்கத் துறை மூலமாக மத்திய அரசு இத்தகைய அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
முந்தைய ஆட்சியிலும் 2012, 2013, 2014, 2015, 2017-ல் பல்வேறு பதவிகளுக்கு இதே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக தேர்வுகள் நடத்தி, பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகள் கண்டிக்கத்தக்கது. அதை முறியடிக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.