Last Updated:
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக சென்னை ராயப்பேட்டையில் தவெக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என என். ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிரமாக இயங்கிவருகின்றன.
திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் பிரதான போட்டியாக பார்க்கப்பட்டுவருகிறது. அதேசமயம், இந்தத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட இருக்கும் விஜய்யின் தவெக கணிசமான தாக்கத்தை தேர்தல் முடிவில் ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியை ஆரம்பித்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில்தான் போட்டி எனவும், அதுதான் இலக்கு எனவும் அறிவித்தார். அதன்படி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அக்கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது.
கடந்த 25ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில், அக்கட்சியின் மாநில, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நாளை (28ஆம் தேதி) ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
நாளை (28.01.2026, புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை…
— TVK Party HQ (@TVKPartyHQ) January 27, 2026
இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (28.01.2026, புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
