காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மற்றும் அதன் சொத்துக்களைச் சட்டவிரோதமாக வாங்கியதாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி கடந்த 2012ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
அம்மனுவை விாசரித்த நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டு இருந்தது. எனவே அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கடந்த ஏப்ரம் மாதம் பணமோசடி சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது.

இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பைக் காலவரையின்றி ஒத்தி வைத்திருக்கிறது. இதையடுத்து அமலாக்கப்பிரிவு கேட்டுக்கொண்டதற்கிணங்க டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இவ்விவகாரத்தில் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் நான்கு பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தவிர அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்), யங் இந்தியன் மற்றும் டோடெக்ஸ் மெர்சண்டைஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றன.
நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் தாய் நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனத்தை மோசடியாக வாங்குவதற்கு மேற்கண்ட 6 பேரும் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.