காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, அத்துடன் மறைந்த கட்சித் தலைவர்களான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா மற்றும் யங் இந்தியன் தனியார் நிறுவனம் ஆகியோர் மீது சதி மற்றும் பணமோசடிகளில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது.
குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிட்ரோடா, துபே, சுனில் பண்டாரி, யங் இந்தியன் மற்றும் டோட்டெக்ஸ் மெர்ச்சன்டைஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள்களை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை இவர்கள் சட்டவிரோதமாகக் கைப்பற்றியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது.
ரூ.90 கோடி கடனுக்கு ஈடாக, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துக்களை மோசடியாக அபகரித்த யங் இந்தியன் நிறுவனத்தில் சோனியா காந்தி குடும்பத்தினர் 76% பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்தது.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு நிறுவன சொத்துகளை மிகக் குறைந்த பணத்தைக் கொடுத்து அபகரிக்க முயன்றதாக சோனியா, ராகுல் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த மனு அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்துள்ளது என நீதிமன்றம் குறிப்பிட்டு, குற்றப்பத்திரிகையை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
