பகலில் 5 ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்; இரவில் திருடன் – விரைவில் பணம் ஈட்ட நினைத்த இளைஞர் சிக்கினார்

Spread the love

டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் வசிக்கும் சென் என்பவர் குடும்பத்தோடு ராஜஸ்தானில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்று இருந்தார். அவர் திருமணம் முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போய் இருந்தது.

வீட்டிற்குள் பூட்டை உடைந்து நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. வீட்டின் பூட்டு முறைப்படி திறக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தது. வீட்டின் உரிமையாளர் இது குறித்து போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருட்டு நடந்த வீட்டிற்கு வெளியில் ஒரு நபர் வாயிலில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார்.

பூட்டை திறப்பதற்கு சிறிது நேரம் போராடி, உள்ளே நுழைந்து, திருடிவிட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு வெளியேறுவது பதிவாகி இருந்தது. திருடிய பிறகு முகத்தில் சால்வையை மூடியபடி ஸ்கூட்டரில் தப்பிச் சென்ற திருடனை கண்டுபிடிப்பதற்காக, ஆர்.கே.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்தர் குமார் தியாகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

திருடன் சென்ற ஸ்கூட்டர் எங்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ள போலீஸார் ரிங் ரோடு வரை கண்காணித்தனர்.

அது துவாரகாவில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றது. அங்கு விசாரித்தபோது அந்த ஸ்கூட்டர் அதே ஹோட்டலில் வேலை செய்யும் நிலேஷ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரது வங்கி பரிவர்த்தனைகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நிலேஷிடம் விசாரித்தனர். நிலேஷ் தான் இரவு நேர பணியில் இருந்ததாக தெரிவித்தார்.

​​ஆனால் நிலேஷ் சம்பந்தப்பட்ட வீட்டில் திருடிக்கொண்டு வந்தபோது முகத்தை மூட பயன்படுத்திய சால்வையும், தற்போது அவரிடம் இருந்த சால்வையும் ஒன்றாக இருந்ததையும், வங்கிக்கணக்கில் நடந்துள்ள பரிவர்த்தனை குறித்தும் விசாரித்தபோது திருடியதை நிலேஷ் ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் அமித் கோயல் கூறுகையில், ”அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 3 மணிக்குள் இத்திருட்டு நடந்துள்ளது. நிலேஷுக்கு புகார்தாரரின் தம்பியை தெரியும். எனவே புகார்தாரரின் குடும்பம் பிப்ரவரி 14 அன்று ஒரு திருமணத்திற்கு புறப்பட்டுச் செல்கிறது என்பதை நிலேஷ் அறிந்திருந்தார்.

அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். சீனப் பூட்டுகளைத் திறக்க மாஸ்டர் சாவியைப் பயன்படுத்தியுள்ளார். திருடப்பட்ட நகைகளை தனது பணியிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருட்டு ஸ்கூட்டருக்குள் மறைத்துவைத்ததார். நிலேஷிடம் இருந்து சுமார் 2.7 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

பூட்டை எளிதாகத் திறக்கக்கூடிய வீடுகளை அடையாளம் கண்டு திருடியுள்ளார். இதே முறையைப் பயன்படுத்தி அம்பேத்கர் பஸ்தியில் உள்ள மேலும் இரண்டு வீடுகளில் திருட முயன்றுள்ளார். அவரிடம் விசாரித்தபோது வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்”என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *