‘பக்தி பகல் வேடம் போடுவது யார்?’ – முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கேள்வி  | fake devotion – Hindu Munnani raised question against CM MK Stalin

1329547.jpg
Spread the love

சென்னை: “நாத்திகர்களும், நக்சல்களும் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதும், ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது பக்தி வேடம் போடுவதும் சந்தர்ப்பவாத பகல் வேட அரசியலா? இரவு வேட அரசியலா என்பதை முதல்வர் ஸ்டாலின்தான் விளக்க வேண்டும்” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பக்தியை பகல் வேட அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் என்று சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். இந்தக் கோயில் மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கடவுள் படம் எதுவும் வைக்கப்படவில்லை, கோயில் உண்டியல் பணத்தில் திருமணச் செலவுகள் செய்யப்படுகின்றன. ஆனால் விளம்பரம் மட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு? இது என்ன வேடம் என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும்

கோயிலில் நடக்கும் எந்த ஓர் ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கலந்து கொள்வதில்லை. அமர்ந்த இடத்தில் இருந்தே காணொலி மூலம் மட்டுமே கலந்து கொள்வது எந்தவிதமான பக்தி என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமே தெரியும். கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று பேசிய ஈவெரா தான் எங்கள் தலைவர் என்று ஒருபுறம் கூறுவது, மறுபுறம் நான் அறநிலையத் துறை சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் தான் அதிகம் கலந்து கொள்கிறேன் என பசப்புவதுதான் முதல்வரின் பகல் வேட அரசியலாகும்.

கோயிலுக்குச் சென்று திருநீறு கொடுத்தால் அதை நெற்றியில் பூசாதது. அப்படி பூசினாலும் அது மீடியாவில் செய்தியாக வந்து விடக்கூடாது என்பதால் அதை அழிப்பது பகல் வேட அரசியலா? பசப்பு அரசியலா? என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்தையும் வேல் வழிபாட்டையும் இழிவுபடுத்திப் பேசியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையோ, கண்டனமோ தெரிவிக்காமல் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது யாரை ஏமாற்றப் போடும் பகல் வேட அரசியல் நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்.

தமிழகத்தில் 2000 கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக வெற்று விளம்பரம் செய்யும் திராவிட மாடல் அரசு, இதில் கும்பாபிஷே விழாவுக்கு அறநிலையத்துறை, தமிழக அரசு செய்த செலவு எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா ? ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின் பல கோயில்கள் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகவும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருப்பதாகக் கூறி இடித்துத் தரைமட்டமாக்கினார்களே, கோயில் நிலத்தில் பேருந்து நிலையம், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளதே, இவைகளை இடித்து அப்புறப்படுத்த துணிவு உண்டா?

நாத்திகர்களும், நக்சல்களும் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதும் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது பக்தி வேடம் போடுவதும் சந்தர்ப்பவாத பகல் வேட அரசியலா, இரவு வேட அரசியலா என முதல்வர் ஸ்டாலின்தான் விளக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *