இந்து பிரஜை அடித்துக் கொலை
மைமன்சிங் என்ற இடத்தில் திபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலை செய்யும் கம்பெனியில் உலக அரபி மொழி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சதாஸ், இஸ்லாம் பற்றியும் முகமது நபி குறித்தும் ஏதோ சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தெரிகிறது. அவர் கூறிய வார்த்தைகள் கம்பெனி முழுக்க பரவியது. இதையடுத்து அங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து தாஸை அடித்து உதைத்தனர். சம்பவ இடத்தில் தாஸ் இறந்து போனார். அத்தோடு விடாமல் தாஸ் உடலை கும்பல் அங்குள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு கொண்டு வந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த மரம் ஒன்றில் தாஸ் உடலைக் கட்டி வைத்தனர்.
அதோடு அவர்கள் ஏதோ கோஷமிட்டபடி தாஸ் உடலை மீண்டும் அடித்தனர். அதன் பிறகு உடலை அங்கிருந்து டாக்கா-மைமன்சிங் நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். நெடுஞ்சாலையில் வைத்து தாஸ் உடலுக்குத் தீவைத்தனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தற்காலிக பங்களாதேஷ் தலைவர் முகமது யூனுஸ், தாஸ் கொலைக்குக் காரணமானவர்களை விடமாட்டோம் என்றும், பங்களாதேஷில் வன்முறைக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹாடி படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘இந்த இக்கட்டான நேரத்தில், வன்முறை, தூண்டுதல் மற்றும் வெறுப்பை நிராகரித்து தியாகி ஹாடிக்கு மரியாதை செலுத்துமாறு ஒவ்வொரு குடிமகனையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.