
”திங்கள்கிழமை அன்று பங்குச் சந்தை புள்ளிகள் உயர்ந்தாலும், பங்குச் சந்தை அடிப்படைகள் எதுவும் மாறிய மாதிரி தெரியவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருக்கிறது. டாலரின் மதிப்பும் அதிகமாகவே இருக்கிறது. விக்ஸ் இன்டெக்ஸும் தொடர்ந்து 25 என்பதற்கு மேலே இருக்கிறது. ரூபாயும் மதிப்பும் இனி குறையும் என்கிற நிலையிலேயே இருக்கிறது. தவிர, எஃப்.ஐ.ஐ.களும் பங்குகளை விற்றுவிட்டு, வெளியேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி எல்லா விஷயங்களும் பழைய நிலையிலேயே இருக்க, பங்குச் சந்தைப் புள்ளிகள் மட்டும் எப்படி உயர்ந்தது என்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் எனில், போர்ச் சூழலால் ஏற்பட்ட பாதிப்பைப் புரிந்துகொண்ட பங்குச் சந்தை இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கி இருக்கிறது. போரினால் பங்குச் சந்தை நல்ல இறக்கம் கண்டுவிட்டது. இனி இந்த நிலையில் இருந்து மெல்ல மெல்ல உயர்வதற்கு பங்குச் சந்தை முயற்சி செய்து வருகிறது.
அமெரிக்க – ஈரான் போர் ஒருபக்கம் நடந்துவந்தாலும், அதனால் இனிமேலும் சந்தை பெரிய அளவில் இறங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ரஷ்யா – உக்ரைன் போர் நடந்துவந்தபோதிலும், ஒரு கட்டத்தில் அதை தாண்டி பங்குச் சந்தை புள்ளிகள் உயர ஆரம்பித்தது போல, அமெரிக்கா – ஈரான் போர் ஒரு பக்கம் நடந்துவந்தாலும், அதையும் தாண்டி சந்தை இனி ஏறத் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கலாம்.
இதற்காக இனி சந்தை இறங்கவே இறங்காது என்று சொல்ல முடியாது. ஆனால், இறக்கம் என்பது ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வந்திருக்கிறதோ என்கிற யோசிக்க வைக்கிறது இப்போது வந்துள்ள ஏற்றம்” என்று சொல்லும் சுனில் சுப்பிரமணியம், இப்போதுள்ள நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன மாதிரியான முதலீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் சொல்கிறார்.