பணத்தை சேமிக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்து பெருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மனதில் முதலில் எழுவது பங்குச் சந்தைதான். பங்குச் சந்தை என்றால் என்ன? அதில் எவ்வாறு முதலீடு செய்வது? பங்குகளை வாங்குவது எப்படி? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பங்குச்சந்தை முதலீட்டுக்கான அடிப்படைகள் குறித்து காணலாம்….
பங்குச் சந்தை என்றால் என்ன?
சந்தை என்பது பொருள்களை வாங்கி விற்பது. பங்குச் சந்தையில் பொருள்களுக்கு பதிலாக பங்குகள் வாங்கி விற்கப்படுகின்றன. பங்குகளை வாங்கி விற்கும் சந்தை, பங்குச் சந்தை.
பங்கு என்றால் என்ன? எதைக் குறிக்கிறது?
ஒரு நிறுவனம் தனது முதலீட்டுக்கு மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று, முதலீடு செய்த விகிதத்துக்கு ஏற்ப லாபத்தில் / நஷ்டத்தில் மக்களுக்கு பணத்தை திரும்பக் கொடுப்பதே பங்கு எனப்படுகிறது.
இது நிறுவனத்தின் பங்கு மதிப்பை குறிக்கிறது.
முதன்மைச் சந்தை
ஒரு நிறுவனத்திடமிருந்து முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளைப் வாங்குவது முதன்மைச் சந்தை. (பிரைமரி மார்க்கெட்) இவை பெரும்பாலும் ஐபிஓ எனப்படும் ஆரம்ப பொது வழங்கல் முறை மூலம் நடக்கிறது.
ஐபிஓ என்பது என்ன?
ஐபிஓ – இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங். தமிழில் ஆரம்ப பொது வழங்கல் எனப்படுகிறது. ஒரு நிறுவனம் தனது வணிகத்தை விரிவாக்குவதற்காக மக்களிடமிருந்து முதலீடுகளை எதிர்பார்க்கிறது. இதற்காக தனது நிறுவனத்திற்குத் தேவைப்படும் தொகையை சிறுசிறு பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்கிறது.
உதாரணமாக ஒரு நிறுவனம், தனது வணிகத்தை விரிவாக்கம் செய்வதற்காக மக்களிடம் ரூ. 10 லட்சம் கோருகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த 10 லட்சம் ரூபாயை 100 பங்குகளாகப் பிரித்து மக்களிடம் விற்பனைக்கு முன்வைக்கிறது. எனில் ஒரு பங்கின் விலை ரூ. 10 ஆயிரம். இந்த நிறுவனத்தின் நன்மதிப்புகளின் அடிப்படையில் பங்குகளை வாங்க நினைக்கும் மக்கள் / முதலீட்டாளர்கள், ஒரு பங்கிற்கு உரிய தொகையைக் கொடுத்து பங்கை வாங்குவர். ஒன்றுக்கு மேற்பட்ட பங்குகளைக் கூட ஒரு முதலீட்டாளர் வாங்கலாம். இதற்கு சில விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.
பங்குகளை விற்றதன் மூலம் தொகையைப் பெற்ற நிறுவனம், அதில் கிடைக்கும் லாபத்தில் விற்கப்பட பங்குகளின் விகிதத்துக்கு ஏற்ப முதலீட்டாளர்களுக்கு லாபத்தை பகிர்ந்தளிக்கிறது. இவ்வாறு பங்குச் சந்தை செயல்படுகிறது.
இரண்டாம் சந்தை
முதலீட்டாளரிடம் இருந்து மற்றொரு முதலீட்டாளர், நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது இரண்டாம் சந்தை எனப்படுகிறது.
அதாவது நிறுவனத்தின் பங்குகளை நேரடியாக வாங்கிய ஒருவர், இடையில் தனது பணத் தேவைக்காக, அப்பங்குகளை மற்றொரு முதலீட்டாளரிடம் கிடைத்த லாபத்துக்கு விற்பனை செய்துவிட்டு வெளியேறுவது இரண்டாம் சந்தை.
இதில் பங்குகளுக்கு ஏற்ப நிறுவனம் வழங்கும் லாப / நஷ்ட விகிதம் மாறாது. ஆனால், அதனைப் பெற்றுக்கொள்ளும் முதலீட்டாளர் மாறிக்கொண்டே இருப்பர்.
சிறிய தொகைக்கு பங்குகளை வாங்கி அதனை நீண்ட காலத்துக்கு விற்பனை செய்யாமல் இருந்து, நிறுவனத்தின் வளர்ச்சி விகிதத்துக்கு ஏற்ப அதிக லாபம் காணும் முதலீட்டாளர்களும் உண்டு.
பங்குகளை எங்கு வாங்கலாம்?
பங்குகளை வாங்கும் சந்தை பங்குச் சந்தை. இந்தியாவில் இரண்டு பங்குச் சந்தைகள் செயல்படுகின்றன.
1. மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.)
2. தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.)
1. மும்பை பங்குச் சந்தை
மும்பை பங்குச் சந்தையில் (பி.எஸ்.இ.) 4909 நிறுவனங்கள் உள்ளன. இந்த பங்குச் சந்தையின் குறியீடு சென்செக்ஸ் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது மும்பை பங்குச் சந்தை நிறுவனங்களின் ஏற்ற இறக்கங்கள் அல்லது லாப நஷ்டங்கள் சென்செக்ஸ் என குறிப்பிடப்படுகிறது.
2. தேசிய பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தையில் (என்.எஸ்.இ.) 2,671 நிறுவனங்கள் உள்ளன . இதில் உள்ள நிறுவனங்களில் ஏற்ற இறக்கங்கள், நிஃப்டி எனக் குறிப்பிடப்படுகிறது. ஆயிரக்கணக்கில் உள்ள நிறுவனங்களின் ஏற்ற இறக்கங்களை கணக்கிடுவது சிரமம்.
அதனால், வங்கித் துறை, ஐடி, நுகர்வோர் பொருள்கள் துறை, எண்ணெய் & எரிவாயு, உலோகத் துறை, ஆட்டோமொபைல் என பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 50 முதன்மை நிறுவனங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப நிஃப்டி புள்ளிகள் கணக்கிடப்படுகிறது,
இதேபோன்று மும்பை பங்குச் சந்தையைப் பொறுத்தவரை 30 நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு சென்செக்ஸ் புள்ளிகள் கணக்கிடப்படுகிறது.
இந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகளின் ஏற்ற இறக்கமே இந்திய பங்குச் சந்தையின் லாப நஷ்டத்தை முடிவு செய்கிறது. அதாவது இந்திய பொருளாதாரத்தை முடிவு செய்கிறது.
பங்குகளை வாங்க என்ன செய்ய வேண்டும்?
பங்குச் சந்தைகளில் பங்குகளை வாங்குவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதில் முதன்மையானது வங்கிக் கணக்கைப் போன்று டீமேட் கணக்கை முதலீட்டாளர் வைத்திருக்க வேண்டும்.
வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் பணம் பாதுகாப்பானதாக இருப்பதைப் போன்று, டீமேட் கணக்கிலும் பங்குகளை வாங்குவதற்காக வைக்கப்படும் பணம் பாதுகாப்புடன் இருக்கும். மேலும், பங்குகள் விலை உயர்வால் கிடைக்கும் லாபம், பங்குகளை விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபம் போன்றவை இந்த கணக்கிலேயே சேர்த்துக்கொள்ளப்படும்.
டீமேட் கணக்கு தொடங்குவது எப்படி?
பங்குச் சந்தைகளில் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது விற்பது போன்ற பணப்பரிவர்த்தனைகளை எளிமையாக்கும் வகையிலும், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் டீமேட் கணக்குகள் தொடங்கப்படுகின்றன.
நிரந்தர கணக்கு அட்டை (பான் அட்டை) இதற்கு அவசியம். ஒரு நிரந்தர கணக்கு அட்டைக்கு ஒரு டீமேட் கணக்கு மட்டுமே தொடங்க முடியும். வங்கிக் கணக்கைப் போன்று பல்வேறு கணக்குகளைத் தொடங்க இயலாது.
தகுதிகள் என்னென்ன?
பங்குச் சந்தையில் வணிகத்தில் ஈடுபட இந்தியக் குடியுரிமை பெற்றவரால் மட்டுமே முடியும். 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். டீமேட் கணக்கை தொடங்க வங்கிக் கணக்குப் புத்தகம் இருக்க வேண்டியது அவசியம். பரிவர்த்தனைகள் நடக்கும் கணக்காக இருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
1. நிரந்தர கணக்கு அட்டை (பேன் கார்டு)
2. ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கடவுச் சீட்டு
3. புகைப்படம்
4. வருமான வரிச் சான்று / வங்கிப் பரிவர்த்தனைகள்
டீமேட் கணக்கைத் தொடங்கிக் கொடுத்து, அவர்களுக்கான பங்குச் சந்தை வணிகத்தை எளிமைப்படுத்திக்கொடுக்க தரகர்கள் உருவாகிவிட்டனர். நவீன காலத்துக்கேற்ப செயலிகளையும் அத்தரர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.
அந்தச் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதில் டீமேட் கணக்கைத் தொடங்குவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உள்ளீடு செய்தால், அதிகபட்சம் 36 மணிநேரத்தில் டீமேட் கணக்கு தொடங்கப்படும். இந்த டீமேட் கணக்கு, முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும்.
பங்குகளை வாங்கி விற்பதால் கிடைக்கும் லாபத்தை டீமேட் கணக்கில் இருந்து நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றி, பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
பங்குகளை எவ்வாறு வாங்கலாம்?
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் செபி எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையத்திற்குட்பட்டவை. இதனால் நம்பிக்கையுடன் எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
ஆனால், முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை, எதிர்கால நிதித் திட்டங்கள், நிர்வாக மேலாண்மை, சமூக சூழல் போன்றவற்றை ஆராய்ந்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.
நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, அந்த நிறுவனத்தின் ஒரு பங்கு விலையைக் கணக்கிட்டு, நாம் விரும்பும் எண்ணிக்கையில் பங்குகளை வாங்கலாம். அதற்குரிய தொகை, வங்கிக் கணக்கில் இருந்து டீமேட் கணக்கிற்கு பரிமாற்ற வேண்டும். அதிலிருந்து பணம் நேரடியாக அந்த நிறுவனத்தின் முதலீடாக சேர்க்கப்படும்.