உதவி கேட்டுகேட்டு அபீரும் அவரது குழந்தைகளும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பழக்கமானவர்களாகவும் மாறியுள்ளனர். அபீர் உணவை எடுக்க அதிக சிரமப்படுவதால் தாங்கள் எடுத்தவற்றில் இருந்து சிலவற்றை அவருக்கு கொடுத்து உதவுவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
“நாங்கள் அனைவருமே இங்கு பசியுடன்தான் இருக்கிறோம், நாங்கள் அனைவருமே சாப்பிட வேண்டும்” என்று கூறுகிறார்கள்.
ஃபதி பெரும்பாலும் குழந்தைகள் தூங்குவதை விரும்புகிறார். ஏனெனில் குழந்தைகள் ஓடி விளையாடும்போது அவர்களுக்கு பசி எடுக்கும். அதைக் குறைக்கவே தூங்கவைப்பதாகக் கூறுகிறார்.
சில நேரங்களில் உணவு கிடைக்காதபட்சத்தில் குழந்தைகளை மட்டும் பிச்சை எடுக்க அனுப்புகிறார்கள். உணவுக்காக குப்பைகளையும் கிளறுகிறார்கள். உணவைச் சமைக்கத் தேவையான எரிபொருள் ஆகியவற்றை அலைந்து திரிந்து சேகரிக்கின்றனர் அந்த குழந்தைகள். அபீர் மகன் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த ஒரு பானையைத்தான் இப்போது அவர்கள் சமைக்கப் பயன்படுத்துகிறார்கள்.
அபீர், தான் பலவீனமாகிவிட்டதாகவும் உணவு, தண்ணீரைத் தேடிச் செல்லும்போது அடிக்கடி தலைச்சுற்றுவதாகவும் கூறுகிறார்.
“நாங்கள் 8 பேர். நான் என்ன செய்ய முடியும்? நான் சோர்வடைந்துவிட்டேன். இனி என்னால் முடியாது. போர் தொடர்ந்தால், என் உயிரை மாய்த்துக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இனி பலமோ சக்தியோ என்னிடம் இல்லை” – அபீர் கூறியது.
காஸாவில் இது அபீர் என்கிற ஒருவருடைய குடும்ப நிலை. ஆனால், இன்னமும் காஸாவில் இருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்களின் நிலையும்கூட இதுதான் அல்லது இதைவிடவும் மோசம்!