பெங்களூருவில் பசுக்கள் தாக்கப்பட்டதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூருவில் கர்ணா கோபாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு அடுத்தத் தெருவில் கட்டப்பட்டிருந்த அவரது பசுக்களை, ஞாயிற்றுக்கிழமை பிகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சையத் நஸ்ரு மதுபோதையில் தாக்கியுள்ளார். சையத்தின் தாக்குதலால், பசுக்கள் ரத்தம் வழிந்த நிலையில் கத்தியதையடுத்து, கர்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, பசுக்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே, சையத் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சையத் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கர்ணாவின் பசுக்கள் மீதான தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்னர். கால்நடை மருத்துவமனை கட்ட இந்துக்களுக்கு ஆங்கிலேயர்கள் தானமாக வழங்கிய சுமார் ரூ. 500 கோடி மதிப்புள்ள நிலத்தில், பள்ளி கட்ட முயன்று வரும் வக்ஃபு வாரியத்துடன் கர்நாடக அரசும் கைகோர்த்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஜன.21,27 நெட் தேர்வு நடைபெறும் – யுஜிசி அறிவிப்பு
கர்நாடக அரசின் இந்தப் போக்கை எதிர்க்கும்வகையில் போராட்டமும் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கர்ணாவும், அவரது பசுக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட கர்ணாவின் பசுக்கள் தாக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சாலவாடி நாராயணசாமி, முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான பசவராஜ் பொம்மை, முன்னாள் துணை முதல்வர் சி.என். அஸ்வத் நாராயண் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.