“பசும்பால் புத்திசாலியாக்கும்; எருமைப் பால் சோம்பேறியாக்கும்” – ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பேச்சு | Rajasthan minister sparks controversy by saying buffalo milk makes children dull

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடந்த பசு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக-வைச் சேர்ந்த அம்மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், “‘பசும்பால் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. அதேசமயம் எருமைப் பால் குழந்தைகளை மந்தமாக மாற்றுகிறது.

நாட்டுப் பசுவின் பால் குடிப்பவர் புத்திசாலிகளாக மாறுகிறார். அதேசமயம் எருமைப் பால் குடிப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். இதை நிரூபிக்க சில நாட்களுக்கு முன்பு கன்றுகளை ஈன்ற சில பசுக்கள் மற்றும் எருமைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை எதிர்ப்பக்கங்களில் நிற்க வைக்குமாறு பரிந்துரைத்தேன்.

அதன் பிறகு சிறிது தூரத்தில் இருந்து கன்றுகளை அவிழ்த்துவிடச் சொன்னேன். இதில் எருமைப் கன்றுக்குட்டிகள் ஓடிச்சென்று தனது தாயைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டன. ஆனால் பசுவின் கன்றுக்குட்டிகள் நேரடியாக தனது தாயிடம் சென்றன.

அதாவது பசுவின் பால் குடிக்கும் குழந்தை புத்திசாலி. அதே நேரத்தில் எருமையின் பால் குடிக்கும் குழந்தைகளின் மனம் பலவீனமாக இருக்கும். இதே போன்று மற்றொரு உதாரணத்தையும் குறிப்பிட்டார்.

பசு மற்றும் எருமை கன்றுகளை அவற்றின் தாயிடம் விடுவதற்கு முன்பு முழுமையாக பால் கொடுங்கள். எருமைக் கன்று, சிறிது தூரம் நடந்ததும் இருமி, தூங்கத் தொடங்கும். அதே நேரத்தில் பசுவின் கன்று, அதன் வாலை உயர்த்திப் பிடித்து, துடிப்பான இயக்கத்தில் குதித்து, அதன் விளையாட்டுத்தனமான ஆற்றலையும் கூர்மையான புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும்” என்று கூறினார்.

மாடு மேய்க்க ரூ.10 ஆயிரம் சம்பளம்

அவர் மேலும் கூறுகையில், “உங்கள் குழந்தைகள் முன்னேற விரும்பினால், அவர்களை முன்னேறச் செய்து, அவர்களைப் புத்திசாலிகளாகவும், விளையாட்டுத்தனமாகவும் மாற்ற விரும்பினால், அவர்களுக்கு ‘கோமாதா’வின் பால் வழங்குங்கள்” என்று முடித்தார்.

14 கிராமங்களில் ஒரு பாரம்பர்ய பசு மேய்ச்சல் முறையை மீண்டும் தொடங்குவதாகவும் மதன் அறிவித்தார். இதன் கீழ் ஒவ்வொரு 70 பசுக்களுக்கு கிராம மாடு மேய்ப்பவர் (குவாலா) ஒருவர் நியமிக்கப்படுவார். எண்ணிக்கை 70 ஐத் தாண்டினால், இரண்டு மாடு மேய்ப்பவர்கள் ஈடுபடுவார்கள். ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு ரூ.10,000 கௌரவ ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *