பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Wedding hall in Pasumpon for Rs 3 crore in the name of the deity Chief Minister Stalin announces

Spread the love

பசும்பொன்: பசும்பொன்னில் ரூ.3 கோடியில் முத்துராமலிங்க தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னையே ஒப்படைத்து உழைத்த தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம். அறம் வளர்த்த பாண்டிய மன்னர்கள் ஒருமித்த இளவல் போல கம்பீரமாக தேவர் காட்சியளிப்பதாக அண்ணா பாராட்டினார். 1963-ல் தேவர் உயிரிழந்தபோது அண்ணாவும், கருணாநிதியும், எம்ஜிஆரும் இந்த பசும்பொன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தை 1969-ல் பார்வையிட்டு, 1974-ல் மணிமண்டபமாக உருவாக்கி கொடுத்தவர் கருணாநிதி. பாம்பன் பாலத்தை கட்டிய நீலகண்டன் தான் இந்த மணி மண்டபத்தையும் கட்டினார். அதேபோல மூக்கையா தேவரின் முயற்சியால் அமைக்கப்பட்டு, மதுரையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தேவர் சிலை திறப்பு விழாவுக்கு அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியை அழைத்துவந்து தலைமை வகித்தவரும் கருணாநிதிதான்.

மதுரை ஆண்டாள் புரம் பாலத்துக்கு தேவர் பெயரை சூட்டியதும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் ரூ.25 லட்சம் மதிப்பிலான அறக்கட்டளையை உருவாக்கியதும் கருணாநிதிதான்.

2007-ல் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக கொண்டாடியதும், தேவரின் நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்தது, தேவர் இல்லத்தை ரூ.10 லட்சத்தில் புதுப்பித்தது, ரூ.9 லட்சத்தில் தேவர் நூற்றாண்டு விழா வளைவு அமைத்தது போன்றவற்றை செய்தது கருணாநிதிதான்.

முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி பசும்பொன் கிராமத்துக்கு மட்டும் ரூ.2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயில் பணிகளை செய்தது திமுக அரசுதான். 1989-ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கி கல்வி வேலைவாய்ப்பில் இந்த சமூக மக்கள் முன்னேற வாய்ப்பை உருவாக்கியவர் கருணாநிதி. மேலநீதித நல்லூரில் அமைந்த பசும்பொன் தேவர் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதும், அந்த கல்லூரிக்கு 44 ஏக்கர் நிலத்தை வழங்கியதும் கருணாநிதி அரசுதான். அந்த கல்லூரியை சிலர் சீர்குலைத்தபோது, எனது அரசு அதில் தலையிட்டு இப்போது சிறப்பாக இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மக்களை மழை வெயிலில் இருந்து பாதுகாக்க தேவர் நினைவிடத்தில் ரூ1.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வத் திருமகனார் அரங்கத்தை கடந்த ஆண்டு நான் திறந்துவைத்தேன். இப்போது பசும்பொன்னில் புதிதாக திருமண மண்டபம் அமைக்க வேண்டுமென ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. அதனை உடனடியாக ஏற்று ரூ.3 கோடியில் இங்கே தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

பசும்பொன்னில் மரியாதை செலுத்தியது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘அடக்குமுறைச் சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தியில் அவரது திருவுருவச் சிலைக்கும், பசும்பொன் நினைவிடத்திலும் எனது மரியாதையைச் செலுத்தினேன். மேலும் மதுரை தெப்பகுளத்தில் மானம் காத்த மருதிருவர் திருவுருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து வணங்கினேன்.

பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்ட மனநிறைவுடன் சென்னைக்குத் திரும்புகிறேன்’ எனத் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *