கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில், மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பருவமழை காலத்தில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் திறந்து விடப்படுவதாக மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நீர் மாசுபடுவதோடு, காவிரி நீர் பச்சை நிறத்தில் மாறி துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி சுப்பிரமணி, “காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கும் போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவு நீர்கள் கலந்து விடப்படுகிறது. இதனால், நீர் மாசுபாடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலமாக தான் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது. காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தரமற்ற முறையில் இருப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. விவசாயத்தைப் பொறுத்தவரை துர்நாற்றம் வீசும் நீரினால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு காவிரி நீர் மாறி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறினார்.