கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.30 லட்சத்துக்கு முஷீர் கானை வாங்கியுள்ளது. அதேசமயம் இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கானை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் வீரரான சர்ஃப்ராஸ் கான் மற்றும் அவரது சகோதரர் முஷீர்கான் இருவரும் ஏலத்தில் பதிவு செய்திருந்தனர். முஷீர்கான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
முஷீர் கான், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அவரது அடிப்படை விலையான ரூ.30 லட்சத்தில் விற்கப்பட்டுள்ளார். 19 வயதான டாப்-ஆர்டர் பேட்டரான முஷீர்கானுக்கு இது முதல் ஐபிஎல் ஆகும்.
சர்ஃப்ராஸ் கான் கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் 2015 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அறிமுகமானார். அவர் ஆர்சிபிக்காக 3 ஆண்டுகளில் 25 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், அவரால் அணியில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கமுடியவில்லை.
சர்ஃப்ராஸ் கான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் 3 ஆண்டுகள் விளையாடியுள்ளார். ஆனால், அங்கு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2 சீசன்களில் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 10 ஆட்டங்களை மட்டுமே விளையாடியுள்ளார்.
சர்ஃப்ராஸ் கான் இதுவரை 50 போட்டிகளில் விளையாடி, அவர் 22.50 சராசரி, 130.58 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 585 ரன்கள் எடுத்துள்ளார்.