புதுதில்லி: பஞ்சாப், மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் மாநில புதிய ஆளுநர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
குலாப் சந்த் கட்டாரியா
பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநராகவும், சண்டிகர் நிர்வாகியாகவும் குலாப் சந்த் கட்டாரியா புதன்கிழமை பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். அவருக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பஞ்சாபின் 30 ஆவது ஆளுநராக கட்டாரியா பதவியேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் முதல்வர் பகவந்த் மான், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பஞ்சாப் மற்றும் யூனியன் பிரதேசத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சந்தோஷ் குமார் கங்வார்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவருக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி சுஜித் நாராயண் பிரசாத் பதவி மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா
மணிப்பூர் ஆளுநராக லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா புதன்கிழமை பதவியேற்றார். புதன்கிழமை காலை இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சித்தார்த் மிருதுல் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசின் மூத்த அதிகாரிகள் , காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் கலந்து கொண்டனர்.