பஞ்சு மில்லைப் பாத்தீங்களா?-ஆத்தாவின் தேடல்

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

ஒருநாள் விடியக்காத்தாலே நேரம். சூரியன் சீக்கிரம் வந்தா நாம் உடனே கிளம்பிடனுமுன்னு நிலா யோசனை பண்ணிட்டிருந்தது.

சூரியனோ இன்னும் கொஞ்சம் நேரங்கழிச்சுப் போகலாமான்னு நினைச்சுட்டு திரும்பிப் படுத்துச்சு. ஊரு சனத்துக்கெல்லாம் தூக்கம்கலையாத நேரம். சொல்லப்போனா அதிகாலைத் தூக்கம் தான்ஆனந்தத் தூக்கம்னு சொல்லுவாங்க. ஆனா அதுதான் ஆகாத தூக்கமுங்கறது பெரியவங்க கணிப்பு.

அந்த நேரத்திலேயே உரல்லே சோளத்தப் போட்டு உலக்கையாலே மல்லுக்கட்டிகிட்டிருந்தா நம்ம லட்சுமியம்மா. உலக்கையை ரெண்டு கையிலும் சேர்த்துப் பிடிச்சு கொஞ்சநேரம் கைகளை மாத்தி மாத்தி உயரப் போட்டு கொஞ்ச நேரம்ன்னு சோளங்குத்தி முடிக்கப் போற சமயத்துலே பளீர்னு கண்ணைக் கூசற மாதிரி ஒரு வெளிச்சம். சந்திரனும் சூரியனும் கூட தன்னை மறந்து திரும்பிப் பார்த்தாங்க.

மின்னல் மின்னுச்சாஆத்தா ? பேத்தி கேட்டாள்.

மின்னலுமில்ல மழையுமில்ல.உரலுக்கிட்ட தங்கசரிகையிலே நெஞ்ச(நெய்த) பட்டுச்சேலை கட்டிகிட்டு உடம்பு முழுக்க பளபளன்னு மின்ற நகைகளோட ஒரு பொண்ணு நின்னுகிட்டிருந்தா.

திகைச்சு போய் நிமிர்ந்து பார்த்தாங்க லட்சுமியம்மா. வழியைவிடு வீடு இருட்டா இருக்கு.உள்ளே போய் வெளிச்சம் கொடுக்கணும்னு வந்த பொண்ணு சொல்ல இந்தம்மாவுக்கு கையும்ஓடலை. காலும் ஓடலை.வந்திருக்கிறதுசெல்வம்கொழிக்கும் தனலட்சுமின்னு நம்ம அம்மாவுக்கு உள்ளுணர்வுசொல்லுச்சு.இருந்தாலும்உள்ளேவிடமாட்டேன்னு லட்சுமியம்மா தடுக்க தனலட்சுமியோவந்ததுக்குவெளிச்சம்காட்டிட்டுபோயிடறேன்னு சொல்ல சூரியனும் சந்திரனும் இவங்க போராட்டத்தை சேர்ந்து வந்து மெய்மறந்து பார்த்தாங்க.

நீ காட்டும் வெளிச்சம் எப்பவும் எங்ககூடவே இருக்கறமாதிரி செய்யறதுன்னாஉள்ளேபோ.

அதில்லேன்னா உன்ற வெளிச்சம் எனக்கு வேண்டா.எம்புள்ளகுட்டிகளை எனக்கு காப்பாத்த தெரியும் நீ போன்னு லட்சுமியம்மா கறாராசொல்லிட்டாங்க.இந்தவார்த்தைகளில்

இருந்த ஆணித்தரத்தை கண்ட தனலட்சுமி உன்னோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். உன்னாலே மத்த சனங்களும் நல்லாயிருப்பாங்க. எல்லாரையும் கைதூக்கிவிடும் சக்தியும்தைரியமும்செல்வமும் கிடைக்குமுன்னு சொல்லிட்டு அந்தப்பெண் உள்ளே போயிட்டா. மானம்(வானம்) பளிச்சுன்னு வெளிச்சமாச்சு. குறுஞ்சிரிப்போ சூரியனும் வந்துட்டான். வீட்டுக்குள்ளே போன லட்சுமியம்மாவுக்கு ஏதோ ஒரு நல்ல மாற்றம் தெரிஞ்சுது. சோளச்சோறாக்கி கொள்ளுப்பருப்பு

கடைஞ்சு எல்லோருக்கும் சந்தோஷமா போட்டாங்க. மனசுலே நிம்மதி நிறைஞ்ச மாதிரி இருந்தது. இந்தநிலையைத்தக்கவச்சு மக்களையும் மத்தவங்களையும் நல்ல நிலைமைக்குத் கொண்டு போக முடியுமுன்னு நம்புனாங்க. அவங்களாலே ஊருக்கும் சனங்களுக்கும் விடிவுகாலம் பொறந்துச்சு.எல்லாமே நல்லதாச்சு.

தொழில் பெருகுச்சு.பசியும் பஞ்சமும் போச்சு. கோயமுத்தூர் மக்களோட நெஞ்சு பூரிச்சது.

யாராத்தா அவங்க? பேத்தியின் கேள்வி.

அவங்கதான் மில்லு முதலாளியோட அம்மா.

அதுக்கப்புறமா அவங்க தொட்டதெல்லாம் துலங்க எடுத்த காரியம் ஏறு முகமாக நல்லதெல்லாம் கூடிவந்துது. செல்வம் பெருகிப் பொங்குச்சு. வந்த தனலட்சுமி அவங்ககிட்டயே தங்கி விட்டதா சொன்னாங்க.எல்லாம் நல்லபடியாக நடந்தது.

ஒரு நிமிஷம் நில்லுங்க!?

இது பேத்தியின் குரல் உங்களுக்காக !

இதுவரைக்கும் ஆத்தா சீரங்கம்மா சொன்னது நிஜமா இல்லை கதையான்னு எனக்கு தெரியாது…

ஆனால் அதுக்குப் பின்னாடி ஆத்தா

சொன்னது சத்தியமா உண்மை.உண்மையைத்

தவிர வேறெதுவுமில்லை. கேளுங்க.

அப்புறமா என்னாச்சு ஆத்தா?

‌‌ கோயமுத்தூர் முழுக்க திருச்சி ரோடு முச்சூடும் அவினாசிரோடு மேட்டுப்பாளையம் ரோடுன்னு எல்லாப் பக்கமும் பஞ்சு மில்லுக வந்துது. கோயமுத்தூர் புல்லா செம்மண்ணும் கரிசல் மண்ணும் நிறைஞ்ச பூமிக தான்.

எனக்குத் தெரிஞ்சு தெற்கே செஞ்சேரி மலை தாண்டி வடக்கே பெரியநாயக்கன்பாளையம் கிழக்கே திருப்பூர் கட்டி மேற்கே ஆலாந்துறை தொண்டாமுத்தூர் வரைக்கும் பூராமே பருத்திக்காடுக தான். பருத்தி நல்லா வெளைஞ்சு காய் வெடிச்சு நிக்கறப்ப பார்க்க கொள்ளைஅழகுதான். மானத்திலிருந்த (வானம்)‌வெள்ளை மொகுலெல்லாம்(முகில்) பூமித்தாய்க்கு வெண்பட்டு விரிச்சாப்லே இருக்கும். தோட்டங்காடு ஆசாரமெல்லாம் (ஹால்) பருத்திப் பொதியா நிறைஞ்சிருக்கும்.

பொண்டுகளுக்கு பருத்தி எடுக்கறதும் புடுங்கறதும் புடிச்சமான வேலை.

வேவாரி (வியாபாரி)களெல்லாம் பூமிக்காரங்க இடத்துக்கே வந்து பருத்திய தரம் பார்த்து விலைபேசி எடுத்துட்டு போவாங்க. கடைகள்லே கூட பருத்தியை கொடுத்துட்டுவேறசாமான்வாங்கிக்கலாம்.

மில்லுக எல்லாம் ஓஹோன்னு ஓடுச்சு.நம்ம கோயம்புத்தூருக்கே நல்லமதிப்பும்

வெளிச்சமும் வந்துச்சு.

பஞ்சு மில்லுகளிலே உள்ளூர் வெளியூர் சனமெல்லாம் வேலைக்கு வந்தாங்க.

நம்ம தென்னாட்டு சீமைக்கெல்லாம் கோயம்புத்தூர் தான் மில்லுத்தொழிலுக்கு ராஜான்னு பேர் வந்துச்சு. வேல வெட்டி இல்லாம யாருமே கஷ்டப்படலை . பொண்ணுங்க முதற்கொண்டு மில்லு வேலைக்குப் போனாங்க. யாருக்கும் வேலையில்லேங்கற வெசனமே இல்லே.

பல்லடத்திலே இருந்து பஸ்லே பார்த்துட்டே போனா வழி நெடுக ரோட்டு மேல பெரிய அளவு கேட்டுகளோட லட்சுமி மில், நரசிம்மாமில் ,சதர்ன்மில் ,விஷ்ணு லட்சுமி மில் ,சர்குணா மில் செல்வராஜாமில், கதிரி மில், கம்போடியா மில், ஷிரி ஹரி மில் ,கஸ்தூரி மில், சரோஜா மில் ,வசந்தா மில் ,ஜெயலட்சுமி மில், ராஜலட்சுமி மில் ,கண்ணபிரான் மில், ரங்கவிலாஸ் மில்,வரதராஜா மில்,கார்த்திகேயா மில் ,கமலாமில் , ஜனார்த்தனா மில் ,காட்டன் மில் ,ராதாகிருஷ்ணா மில் ,லட்சுமி மில்,ஸ்டேன்ஸ் மில்லுன்னு கோயமுத்தூர் முழுக்க மில்லுக ராஜ்யம் தான்.

கார்த்தாலே ஆறே முக்கா மணிக்கு மில்லு சங்குஊதுனா எல்லாரும் பறந்தடிச்சுட்டு மில்லுகேட்டுக்குள்ளே போறதப் பார்க்கறது ரொம்ப நல்லா இருக்கும். அதிலும் சில மில்லுலே பள்ளிக்கூடம் போற பசங்களாட்டா எல்லாரும் யூனிபாரத்துலே போறது பட்டாம்பூச்சிக்கூட்டத்தைப் பார்க்குற மாதிரி இருக்கும் .

பஸ் ஸ்டாப்பில் போய் நிறுத்துனா நேரமாகிப் போகுமின்னு பஸ்ஸுகாரங்களும் மில்லுகேட் வாசல்லேயே இறக்கி விடுவாங்க.அப்படி மனுசங்க ஒருத்தருக்கொருத்தர்ஒத்தாசையாஇருந்தாங்க.திரும்ப நாலு மணிக்கு வரும்போது குளத்திலிருந்து ஒரு சேர பறக்குற பறவைகளாட்டம் ஒண்ணா வெளியே வருவாங்க. நிம்மதியான மதிப்பான தொழில்.

மில்லுல பஞ்செல்லாம் சுத்தமாச்சு. சுத்தமானபஞ்செல்லாம் திரியாச்சு.திரியெல்லாம் நூலாச்சு. நூலெல்ல இழையாச்சு. இழை மொத்தமாக வெளியிடங்களுக்கு வெளி நாடுகளுக்கு அனுப்பிவச்சாங்க.

மில்லுத் தொழில்லே லாபம் பெருகப் பெருக தொழிலாளிகளுக்கு கொறஞ்ச வாடகையிலே வீடுகட்டிக் கொடுத்தாங்க. குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் கட்டுனாங்க. மேல் பள்ளிக்கூடம்போக பஸ் கொடுத்தாங்க.

மருத்துவம் பார்க்க இ.எஸ்.ஐ வந்துச்சு. பிள்ளைப்பேறு காலத்துலே லீவு, லீவு முடிஞ்சு வேலைக்கு போறப்ப குழந்தைகளைப் பார்த்துக்க பேபி வார்டு எல்லாம் கொடுத்தாங்க.

ஈஸ்வரா காலத்து பஞ்சம், பேதி பிளேக்கு சின்னமாரியாத்தா ,பெரியமாரியாத்தா, விஷக்காய்ச்சல்னு ஏகப்பட்ட சிரமங்களிலிருந்து நான் மீண்டுவந்தது பெரிய கதை. உங்கப்பன் மில்லுக்கு சேர்ந்த பிறகுதான் நிம்மதியா இருக்கேன்.நா மட்டுமில்ல கண்ணு என்னைப்போல் ஆயிரக்கணக்கானபேரும்சந்தோஷமா

இருக்க இந்தப் பஞ்சு மில் தான் காரணம்.படிப்பு தேவையில்லை. முன் அனுபவம் தேவை இல்லை.

உள்ளே போயிட்டா எல்லா வேலையும் பழகிக்கலாம். பிஎப் ,கிராஜுவிட்டி, ஓய்வுலீவு சம்பளம், மெடிக்கல் லீவு காசுன்னு எல்லாமே உண்டு. இது போக வருஷா வருஷம் தீபாவளி போனஸ் வேற. புத்தியுள்ள புருஷன் பொண்டாட்டியா இருந்தா போனஸ் பணத்தை சேர்த்து வச்சே பிள்ளைகள் படிப்பு, கல்யாண செலவை கடனில்லாம முடிச்சிறலாம்.

வேலை செய்யறவங்க சோர்ந்து போகாமல் சந்தோஷமாக இருக்க வாரக்கடைசி மூணுநாள் சினிமாவேற. நைட்டு வேலைக்காரங்களுக்கு பகல் காட்சி தனியா காட்டுறாங்க. இத்தன வசதி எங்க கிடைக்கும சொல்லு. மில்லுக்கார மாப்பிள்ளைக்கு போட்டி போட்டு பொண்ணு குடுப்பாங்க.

நஞ்சை புஞ்சை மாப்பிள்ளை எல்லாம் நாலடி தள்ளித்தான் நிற்க வேணும். இது போக வாரிசு வேலைக்கு சேர்த்துக்கலாம். மில்லுல ஸ்பின்னிங், டபுளிங் ,வைண்டிங், கோன் வைண்டிங், ரீலிங், கிளீனிங், பிட்டர் ,புளோரூம், பவர்ரூம் , கிளார்க் ,சூப்பர்வைசர், டைம்கீப்பர் மேனேஜர்னு ஏகப்பட்ட டிபார்ட்மெண்ட் இருக்கு. நீ கூட கண்ணு நல்லாப்படிச்ச பின்னாடி உங்கம்மா வாரிசுக்கு மில்லுல சேர்ந்துக்க. நல்ல எதிர்காலம் இருக்கு.

ஆத்தா சீரங்கம்மா ஆத்தா!! கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. இந்தா தண்ணி ஒருவாய் குடி. இத்தனை நேரம் நீ சொன்னதையெல்லாம் நான் கேட்டேன். இனி இப்ப நான் சொல்லப் போறதை கவனமா கேளு.

சொல்லு கண்ணு. நான் சொன்னதைக் கேட்டு மில்லு வேலை உனக்கும் பிடிச்சுடுச்சா.

ஐயோ ஆத்தா அப்படியில்லை. நீ சொன்ன மில்லுகளோ மில் வேலையோ இப்ப இல்லை. பழைய பெரிய முதலாளிகள் காலத்தோடு மில்லெல்லாம் போச்சு. எல்லாமே முடிஞ்சு போச்சு. மில் முதலாளிகள் வாரிசுகளெல்லாம் வெவ்வேறு தொழில் நடத்தப் போய்ட்டாங்க.

ஏன் பழைய மில்லுக்கட்டடங்களோ கல்லோ மண்ணோ கூட இப்ப இல்லை. எல்லா மில்லுகளும் பெரிய நிறுவனங்களாகவும் சினிமா தியேட்டர்களாகவும் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் வணிக மாலுகளாகவும் ஆஸ்பத்திரிகளுமாகவும் மாறிப்போச்சு.

மில் வேலை நலிஞ்சு காணாமப்போயிருச்சு. இப்ப உள்ள பசங்க பொண்ணுங்க எல்லாம் ஐ.டி வேலைக்கு கம்ப்யூட்டர் வேலைக்கு எஞ்சினியர் வேலைக்கு வெளி நாட்டு வேலைக்கு இப்படித்தான் போறாங்க. நீ நினைக்கிற இல்லாமல் காலமும் கோலமும் மாறிப்போச்சு. கம்ப்யூட்டர் உலகமும் ரோபோ உலகமும் வந்துடுச்சு.

ஐயோ நீ என்ன கண்ணு சொல்றே. எங்கடைசி ஆசைக்கு கரைச்சு ஊத்தக் கூட மில்லு மண்ணு இல்லையா?! போச்சா எல்லாம் போச்சா. ஆ…… ஐயோ….ஆ…ஆ..ம்.!!!

ஐயோ. ஆத்தா…..ஆத்தா…..போயிட்டியா நீ போயிட்டியா ஆத்தா?

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *