சென்னை: பட்டாசுகள் வெடிக்கும்போது வெடிமருந்து, தீப்பொறி பட்டால் கண்களை தேய்க்கக்கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் தங்கராணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் தங்கராணி கூறியதாவது: எழும்பூர் அரசு கண் மருத்துமவனையில், பட்டாசுகளால் ஏற்படும் கண் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசரகால அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான, அறுவை சிகிச்சை அரங்கமும் தயார் நிலையில் உள்ளன.
பட்டாசுகளால், கண்களில் லேசான எரிச்சல், கண்விழிப்படலம் சிராய்ப்புகள் போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் கண் பார்வை இழப்பு கூட ஏற்படலாம். குறிப்பாக, ரசாயனம் கலந்த பட்டாசுகள், தங்கத்தை உருக்கும் அளவில் 1,800 பரான்ஹீட் டிகிரியில் வெப்பநிலையில் வெடிப்பதால், தள்ளி நின்று பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தீப்பொறி, வெடி மருந்து உள்ளிட்டவை கண்களில் பட்டால், கண்களை தேய்கவோ, கசக்கேவோ கூடாது.
அவ்வாறு செய்தால், ரத்த கசிவு ஏற்பட்டு கண் பார்வை இழப்புக்கான ஆபத்தாக முடிந்து விடும். கண்களையும், முகத்தையும் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். கண்களில் பெரிய அளவில் ஏதேனும் குத்தி கொண்டிருந்தால், அவற்றை அகற்ற முயற்சிக்காமல், மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.