பட்டாசு ஆலைகளுக்கு எதிர்ப்பு: எட்டயபுரம் அருகே விவசாயிகள் போராட்டம் | Oppose Crackers Factory Setup: Villagers Protest Near Ettayapuram

1375154
Spread the love

கோவில்பட்டி: எட்டயபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டயபுரம் அருகே இனாம் அருணாச்சலபுரத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை நிர்வாகியின் உறவினர் கந்தசாமி என்பவர் உயிரிழந்தார். ஏற்கெனவே, மானாவாரி விவசாய நிலங்களுக்கு அருகே பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இப்பகுதியில் செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தங்கள் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் கட்டுமான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மானாவாரி விவசாயத்தின் முன்னோடியாக உள்ள இப்பகுதியில் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி இன்று காலையில் மானாவாரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடந்தது.

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே மு.கோட்டூர்புரம் விலக்கில் நடந்த போராட்டத்துக்கு கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் தலைமை வகித்தார். தமாகா வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால், ஒன்றிய அதிமுக செயலாளர் தனபதி மற்றும் இனாம் அருணாச்சலபுரம், கருப்பூர், தோழ் மாலைப்பட்டி, வீரப்பட்டி, முத்தலாபுரம், சக்கிலிபட்டி, கீழ்நாட்டுக் குறிச்சி, அயன் வடமலாபுரம், கோட்டூர், மேலக்கரந்தை கிராமங்களை சேர்ந்த மானாவாரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

17568080263055

போராட்டத்தில், எட்டயபுரம் வட்டத்தில் மானாவாரி விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசையும், அதிகாரிகளை கண்டித்தும், எட்டயபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு ஆலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணிகள் வழங்க வேண்டும். தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மு.கோட்டுபுரம் விலக்கில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *