சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடிப்புகளால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் 20 பேர். இந்த 20 பேரில் 20 சதவிகிதம் தீக்காயம் தான் அதிகபட்சமான பாதிப்பு என்கிற நிலையில் இருப்பதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.31) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி அரசு விடுமுறை நாளில் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி, தேநீர் அருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் தீபாவளி முன்னெச்சரிக்கை தீக்காய சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி தீக்காய சிறப்பு பிரிவு ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் 25 படுக்கைகளுடன் கொண்ட ஒரு பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையைப் பொறுத்தவரை தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிப்புகளினால் உயிரிழப்புகள் இல்லாத நிலை என்பது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் இங்கே உயரழுத்த பிராண வாயு சிகிச்சை மையம் ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதிநவீன சிகிச்சை முறைகளில் ஒன்றான உயர் அழுத்த பிராண வாயு சிகிச்சை மையம் இன்றுடன் சேர்த்து 44 நோயாளிகள் சிகிச்சை பெற்று பலன் அடைந்திருக்கிறார்கள்.
இன்று தீபாவளியினையொட்டி, இதுவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்துள்ள பட்டாசு விபத்துகள் குறித்த விவரங்களை கேட்டறிந்திருக்கிறோம். அந்த வகையில் சென்னையை பொறுத்த வரை 6 பேர் சிறிய பாதிப்புகள் என்று வந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள். 3 பேர் இம்மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 2 குழந்தைகள், ஒரு குழந்தைக்கு 11 சதவிகிதம் என்று, இன்னொரு குழந்தைக்கு 12 சதவிகிதம் என்று பாதிப்புக்குள்ளாகிய சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இரண்டு நாள் சிகிச்சைகளுக்கு பிறகு அவர்களும் நலமுடன் இல்லம் திரும்புவார்கள். ஒருவருக்கு 2 சதவிகிதத்தின் அடிப்படையில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், அவர் இன்றோ, நாளையோ இல்லம் திரும்புவார். மதுரை மாவட்டத்தில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் ஒருவருக்கு மட்டும் 20 சதவிகிதம் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கும் உயிர் பாதுகாப்பு என்கின்ற நிலை நீடித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 பேரும், திருச்சியை பொறுத்தவரை 3 பேர் என்று இதுவரை அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் 20 பேர், இந்த 20 பேரில் 20 சதவிகிதம் தான் அதிகபட்சமான பாதிப்பு என்கின்ற நிலையிலும், மீதமிருப்பவர்களுக்கு குறைந்த அளவிலான பாதிப்புகள் என்கின்ற அளவில் இருக்கின்றது, எனவே இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி உயிர் பாதிப்புகள் இல்லாத வகையில் நடைபெற்று முடிந்திருப்பது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
தமிழகத்தைப் பொறுத்தவரை 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை பொறுத்தவரை, ஒரு ஓட்டுநர் கூட விடுப்பு எடுக்கக் கூடாது என்கின்ற நிலையிலும், அந்த ஆம்புலன்ஸில் பணியாற்றிக் கொண்டிருக்கிற மருத்துவத்துறையை சேர்ந்த அலுவலர்கள் யாரும் விடுப்பு போடக்கூடாது என்றும் அறிவுறுத்தி, அனைத்து வாகனங்களும், அந்தந்த வாகனங்கள் நிறுத்துமிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
108 மையத்தை பொருத்தவரை, நாள்தோறும் சுமார் 12,000 அழைப்புகள் வரை வந்து கொண்டிருக்கிறது. தீபாவளியை பொருத்தவரை அந்த ஒரு நாளில் மட்டும் அந்த 12,000 என்பது 70% உயர்ந்து 20,000 வரை வரும். அந்தவகையில் தினந்தோறும் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 5,000 எண்ணிக்கையில் இருக்கும். தீபாவளியைப் பொறுத்தவரை 8,000 வரை உயரும். அதனை நேற்று துணை முதல்வர் 108 ஆம்புலன்ஸ்களின் பணிகளை ஆய்வு செய்து கண்காணித்தார்.
அந்தவகையில் அனைத்து துறைகளின் சார்பிலும் குறிப்பாக தமிழகத்தின் சேவை துறைகள் அனைத்தும் தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு, மிகத் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, என்று அவர் கூறினார்.