அம்பேத்கரிய சிந்தனையுடன், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலில் களமாடிக் கொண்டு இருப்பவர் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன். 4 முறை எம்எல்ஏ.வாக இருந்த அனுபவம் கொண்ட தமிழரசன், தமிழக அரசியலின் லேட்டஸ்ட் கள நகர்வுகள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி.
தமிழகத்தில் பட்டியலின மக்களின் வாக்குகளை அதிகமாக அறுவடை செய்வது யார்?
தமிழகத்தில் 23 சதவீதமாக இருக்கும் பட்டியலின மக்களின் வாக்குகள் தான், தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. ஆனால், அவர்களின் வாக்குகள், நிலையாக ஒரு கட்சிக்கு போவதில்லை. அதனால்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கட்சி உறுப்பினர் அட்டை அடிப்படையில் வாக்குகளைக் கணக்கிடும் கட்சிகள் தப்புக்கணக்கு போட்டு, இதனால் தான் தோற்றுப் போகின்றன. பட்டியலின மக்களுக்கு என தனிப்பார்வை உள்ளது. இதை மற்றவர்கள் புரிந்துகொள்வதில்லை
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தபோது, அவர்களுக்கு பட்டியலின மக்கள் பெருவாரியாக ஆதரவு அளித்தனர். விஜய்க்கும் அத்தகைய ஆதரவு கிடைக்குமா?
பட்டியலினத்தவரும், பெண்களும் தான் அதிமுகவின் வெற்றிக்கு காரணம் என எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் புரிந்து வைத்திருந்தனர். அதனால், அவர்களுக்கு வாக்குக் கிடைத்தது. ஆனால், பாக்யராஜ், டி.ராஜேந்தரில் தொடங்கி கமல் வரை அதன் பிறகு அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு, பட்டியலினத்தவரின் ஆதரவு கிடைக்க வில்லையே… அதனால், விஜய் முழுமையாக அரசியல் களத்தில் இறங்கும் போதுதான் அவருக்கு ஆதரவு கிடைக்குமா எனத் தெரியவரும்.
சாதியின் பெயரால் தெருக்கள், ஊர்கள் இருப்பதைத் தடுக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறீர்களா?
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. பொதுஇடங்கள், தெருக்களுக்கு சாதிபெயர்கள் வைக்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. உதாரணமாக, ராஜகோபாலாச்சாரியார் என்ற பெயர் கூட அப்போதுதான் ராஜாஜி ஆனது. ஆனால், இந்த நடைமுறையை மீறி, சென்னையில் கட்டப்பட்ட பாலத்திற்கு மூப்பனார் பெயரை சூட்டியவர் கருணாநிதிதான். இப்போது கூட, ஒருபுறம் அரசாணையை வெளியிட்டுவிட்டு, கோவை பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைத்துள்ளனரே?
சாதி பார்த்தே தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கும் நிலையில் இந்த அரசாணையால் என்ன பயன் கிடைக்கப் போகிறது?
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பட்டியலினத்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இருகழக அரசுகளும் தங்களது அமைச்சரவையில் கூட முக்கிய இலாகாக்களை பட்டியலினத்தவருக்கு வழங்குவதில்லையே… எம்ஜிஆர் சவுந்திரபாண்டியனுக்கு தொழில்துறை அமைச்சர் கொடுத்தார். ஜெயலலிதா தனபாலுக்கு கூட்டுறவு, உணவுத் துறை அமைச்சர் பதவியோடு, சபாநாயகர் பதவியும் கொடுத்தார்.
ஆனால், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவதற்கு எந்தக் கட்சியும் ஆதரவு தரவில்லை. அவர்களுக்கு அந்த எண்ணமே இல்லை.
திராவிட இயக்கங்களில் பட்டியலினத்தவருக்கு மாவட்டச் செயலாளர் பதவிகூட கிடைப்பதில்லை. காங்கிரஸில் மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவராகவும், செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவராகவும் இருந்தாலும், பட்டியலினத்தவரில் எத்தனை பேருக்கு மாவட்டத் தலைவர் பதவி கிடைத்துள்ளது?
மூப்பனார் ஏற்பாட்டில், கடந்த 1999-ல் தலித் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி, நீங்கள், திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிட்டீர்களே… அந்த அமைப்பு தொடராததற்கு காரணம் என்ன?
தேர்தலுக்குப் பிறகு, தமாகா எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்று கிருஷ்ணசாமி பிரிந்து சென்றுவிட்டார். அந்த அமைப்பு அப்படியே தொடர்ந்திருந்தால் பட்டியலின முதல்வர் என்ற இலக்கை நோக்கி பயணித்து இருக்கலாம்
அதிமுக – பாஜக – தவெக கூட்டணி அமைந்தால் திமுகவின் வெற்றி சவாலாக மாறுமா?
நிச்சயம் சவாலாக இருக்கும். ஆனால், பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்ன விஜய், இதுவரை அதனை மாற்றிச் சொல்லவில்லையே. அப்படியே பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், தெளிவான விளக்கத்தை மக்களுக்கு அவர் அளிக்க வேண்டி இருக்கும்.
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று முதல்வர் நம்பிக்கையாகப் பேசுகிறாரே..?
அவர் அதிகாரத்தில் இருக்கிறார். அதிகாரத்தில் இருப்பவர்களின் பார்வை அப்படித்தான் இருக்கும். இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது, பல தொகுதிகளில் டெபாசிட் போனது என திமுகவுக்கும் கடந்த காலங்களில் பெரும் சரிவு வந்திருக்கிறது.
திமுக ஆட்சியில் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளன. பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று குற்றம் சாட்டியுள்ளீர்களே..?
புள்ளிவிபரங்கள் அப்படித்தான் கூறுகின்றன. தமிழகத்தில் அம்பேத்கருக்கு என முதன் முதலில் புழல் பகுதியில் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை தாக்கப்பட்டதற்கு இந்த ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என கேட்கிறோம். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டுமென நாங்கள் மட்டுமல்ல, திமுக கூட்டணி கட்சிகளும் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லையே… மொத்தத்தில், பட்டியலின மக்கள் மீது, திமுகவுக்கு அக்கறை இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு இவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? இந்தக் கோபம் தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்கும்.
கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்?
தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் பெறவில்லை.
2026 தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம்பெறப் போகிறீர்கள்?
கடந்த 2021 தேர்தலில் நான் போட்டியிடவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தோம். பட்டியலின அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். மேலும், தற்போது உருவாகியுள்ள கூட்டணிகள் தேர்தல் வரை தொடருமா என்பது தெரியவில்லை. எனவே, தேர்தல் நெருக்கத்தில் அதுகுறித்து முடிவு எடுப்போம்.