பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக தேர் செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court Orders Chariots to Pass through Areas inhabited by Scheduled Castes

1370510
Spread the love

சென்னை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பன்தட்டை ஶ்ரீ வேத மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவின்போது, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக தேர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பன்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோயில் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் செல்வதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறி அக்கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், மணிவண்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டியலின மக்கள் வசிக்கும் குறிப்பிட்ட பகுதி வழியாக தேர் செல்ல முடியுமா என்றும், சாலையின் அகலம் மற்றும் தேரின் நீள, அகலத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்ட தெருக்களின் வழியாக தேர் செல்வதில் எந்த இடையூறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த கோயில் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக செல்ல தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *