‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என போராடி வருகிறோம்: சீமான் | seeman press meet in paramakudi

1376165
Spread the love

பரமக்குடி: ‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என்ற முழக்கத்தை முன்வைத்து அதிகாரத்துக்காக போராடி வருகிறோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரமக்குடியில் தெரிவித்தார்.

ராமநாதபுரம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ் சமூகத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றால் தமிழினம் தாழ்கிறது என்பது எங்களது நோக்கம். தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லை கவனித்தாலே தெரியும். அதில் என்னை தாழ்த்தியவன் யார் என்ற கோபம் இமானுவேல் சேகரனுக்கும் எழுந்தது.

சாதி ஏற்றத் தாழ்வுகளற்ற சமதர்ம சமுதாயம் படைக்க எண்ணியவர் அவர். அவரது கனவை சுமந்து எங்களது பயணத்தை தொடர்வோம். இதில் ‘பட்டியல் விலக்கே தேவேந்திரர் இலக்கு’ என்ற முழக்கத்தை முன்வைத்து அதிகாரத்துக்காக போராடி வருகிறோம். அரசு மக்கள் பிரச்சினைகளை கையில் எடுக்காதபோது, மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை. தேவேந்திர சமூக மக்களை பட்டியல் இழிவிலிருந்து வெளியேறுவோம் என உறுதி ஏற்கிறோம். இதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் எங்களை வலிமையான அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும்.

அந்தந்த கட்சியில் இருக்கும் பிரச்சினைகளில் இன்னொரு கட்சியில் தலையிடுவது நாகரிகமற்றது. ஒரு கட்சியில் ஏற்படும் பிரச்சினையால் நாட்டுக்கு என்ன பிரச்சினை என்பது கருத வேண்டும். நாட்டில் நடக்கும் அநீதியை எதிர்த்து பேசுவது தவறு என்று கருதப்படுமானால் அந்த நாட்டை ஒரு குற்றவாளி ஆட்சி செய்வதாக பொருள் என அறிஞர் சொல்லியுள்ளார். அடக்குமுறையான அரசு நடக்கும்போது அந்த அரசை நடத்துபவன் குற்றவாளியல்ல, அந்த அதிகாரத்தை அளித்த மக்கள்தான் குற்றவாளிகள் என்கின்றனர்.

தமிழகத்தில் போராடினால்தான் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழகத்திலுள்ள குப்பையை சுத்தப்படுத்த ஆந்திர மாநிலக்காரருக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளனர். இதில் ஒரு கிலோ குப்பை அள்ள ரூ.12 கட்டணம் என்கின்றனர். அரசு கழிவறையை கழுவ ரூ.350 என கட்டணம் நிர்ணயித்து கொள்ளையடிக்கின்றனர். இதற்காக சென்னை மாநகராட்சியில் மாதத்திற்கு ரூ.270 கோடியும், பத்து மாதத்திற்கு ரூ.2700 கோடி என இடைத்தரகர் மூலம் கொள்ளையடிக்கின்றனர். குப்பையை கூட அள்ள தகுதியும் திறமையும் இல்லாத ஆட்சியாளர்கள் உள்ளனர்.

நான் தமிழக முதல்வரானால் கச்சத்தீவை மீட்டு விடுவேன். ஆனால், 2024 தேர்தலில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். அதோடு அந்த பேச்சை விட்டுவிட்டார். கச்சத்தீவை கொடுத்தது காங்கிரஸ், வேடிக்கை பார்த்தது திமுக. ஆனால் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதி மட்டும் கொடுக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து நெய்தல் பயணத்தில் பேசுவேன். நான் வாக்கு அரசியல் செய்பவனல்ல, மக்களின் வாழ்க்கைக்காக அரசியல் செய்பவன்” என்று அவர் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *