'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' – ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்?

Spread the love

கிட்டத்தட்ட 80 – 90 முறை… ‘நான் தான்’ இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவிட்டார்.

இவரது இந்தக் கூற்றை ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்தும்… மறுத்தும் வருகிறது இந்தியா. ஆனால், ‘ட்ரம்ப் தான் போரை நிறுத்தினார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்’ என்று சரணடைந்துவிட்டது பாகிஸ்தான்.

தான் போர் நிறுத்திய கூற்றை மீண்டும் ட்ரம்ப் பேசியிருக்கிறார்.

அவர் சமீபத்தில் அமைதிக்கான குழு ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அதன் நிகழ்வு ஒன்று நேற்று (பிப்ரவரி 19) நடந்துள்ளது. அந்த நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டிருக்கிறார்.

மோடி - ட்ரம்ப்
மோடி – ட்ரம்ப்

அமைதிக்கான குழு நிகழ்வில் கலந்துகொண்ட ட்ரம்ப் பேசியிருப்பதாவது…

“இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். இதன் மூலம் 25 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறேன்.

இந்திய பிரதமர் மோடி, ஷெபாஸ் ஷெரீப் இருவரையும் தொலைபேசியில் அழைத்து பேசினேன். அவர்கள் இருவரையும் எனக்கு கொஞ்சம் தெரியும். எனக்கு பிரதமர் மோடியை நன்றாகத் தெரியும்.

நீங்கள் இந்தப் போரை நிறுத்தவில்லை என்றால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் நான் போடமாட்டேன். இரு நாடுகளின் மீதும் தனித்தனியாக 200 சதவிகித வரி விதிப்பேன் என்று கூறினேன்.

இருதரப்பினருமே சண்டை போட தயாராக இருந்தனர். ஆனால், பணம் என்று வந்துவிட்டால், அது போல எதுவும் இல்லை.

அவர்கள் பணத்தை இழக்க விரும்பவில்லை. அதனால், அவர்கள் சண்டை போட வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டார்கள்.

அவர்களது சண்டையில் மிகவும் மதிப்புள்ள 11 ஜெட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.

ஷெபாஸ் ஷெரீப்
ஷெபாஸ் ஷெரீப்

இந்தப் பேச்சின் போது, நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஷெபாஸ் ஷெரீப்பை எழுந்து நிற்க கூறினார் ட்ரம்ப். இது ஷெபாஸ் ஷெரீப்பிற்கு மிகவும் சங்கடமான சூழலாக இருந்தது.

முன்பு, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது மூலம், 10 மில்லியன் மக்களைக் காப்பாற்றினேன் என்று கூறிய ட்ரம்ப், தற்போது எண்ணிக்கையைக் கூட்டியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *