தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் பகுதியில் உள்ள தென்னைத் தோப்பு ஒன்றில் பணம் வைத்து ரம்மி சூதாட்டம் நடப்பதாக ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஆறு பேரைக் கொண்ட கும்பலை பிடித்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்து ரூ.3.27 லட்சம் பணம், மூன்று சொகுசு கார்கள், ஆறு செல்போன்களை பறிமுதல் செய்து, சூதாடிய ஆறு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில், திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவரான அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தனபால் (64), ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சசிகுமார் (48), தென்னமநாடு நடுத்தெருவை சேர்ந்தவரான அதிமுக இளைஞரணி செயலாளர் கோவிந்தராஜ் (53), திருமங்கலக்கோட்டை மேலையூரை சேர்ந்த வேலாயுதம் (60), துலுக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (56), கண்ணந்தன்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் (51) ஆகியோர் என்பதும், இவர்கள் சேர்ந்து தொடர்ந்து சூதாடி வந்ததும் தெரிந்தது.