சென்னை: பணிநிரந்தம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 3,500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் 1,700 பெண்கள் உட்பட 3,500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அப்போது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தங்களை தமிழக அரசு பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக அறிவித்தது. ஆனால், இதுவரை தமிழக அரசு அதற்கான முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. இதுசார்ந்து பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. அதனால் போராட்ட களத்துக்கு வந்துள்ளோம். எங்கள் நிலையை உணர்ந்து பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்’’என்றனர்.
தலைவர்கள் கண்டனம்: இதற்கிடையே பகுதிநேர ஆசிரியர்களின் கைதை கண்டித்தும், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விசிக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.