கரூர்: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி, கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரை சேர்ந்த கிருஷ்ணன் (43). கரூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பில் ஆன்லைன் வர்த்தகம் செய்ய ரூ.7 லட்சம் அளித்திருந்தார். சில மாதங்களில் லாபத்துடன் பணத்தை தருவதாகக் கூறியவர் அதன் பிறகு தொடர்பு கொண்டபோது தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
விக்னேஷ் கடந்த ஜூன் 5-ம் தேதி கரூர் வந்தப்போது கிருஷ்ணன் அவரை சந்தித்து பணத்தை கேட்டப்போது தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து கல்லால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்து கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விக்னேஷ் மீது மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் கடந்த ஜூன் 5ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கர் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இவ்வழக்கில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் நீதிபதி பரத்குமார் முன்பு சவுக்கு சங்கரை போலீஸார் ஜூலை 9-ம் தேதி ஆஜர்படுத்தி 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், நீதிபதி 4 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கினார். 4 நாட்கள் விசாரணை முடிந்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல், சவுக்கு சங்கரை போலீஸார் ஜூலை 13ம் தேதி ஆஜர்படுத்தினர். இதையடுத்து சவுக்கு சங்கருக்கான நீதிமன்ற காவலை ஜூலை 23-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.