புதுச்சேரி: பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை இணையவழியாக செலுத்தும் சேவை புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்கள் பணபரிவர்த்தனை அற்றவையாக மாறுகின்றன.
புதுச்சேரி அரசின் வருவாய்த் துறையில் கீழ் இயங்கி வரும் பதிவுத்துறையில் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், பதிவுத்துறை சார்ந்த செயல்முறைகளை கணினி மயமாக்கி இணையத்தளம் மூலம் தர முடிவு எடுக்கப்பட்டது.
பதிவுத்துறையில் திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ் வழங்குதல், ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் மற்றும் திருமணச் சான்றிதழ் நகல் போன்ற சேவைகள் இணைய வாயிலாக அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பதிவுத்துறையில் பத்திரப் பதிவிற்கான கட்டணம் இணைய வாயிலாக செலுத்தும் சேவையை பாரத ஸ்டேட் வங்கி புதுச்சேரி கிளை உடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதள சேவையினை முதல்வர் ரங்கசாமி இன்று துவக்கி வைத்தார்.
அமைச்சர் லட்சுமிநாராயணன், வருவாய்த் துறை செயலர் ஆஷிஷ் மாதோராவ் மோரே, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன். மாவட்டப் பதிவாளர் செந்தில் குமார், பாரத ஸ்டேட் வங்கி புதுச்சேரி முதன்மை கிளை உதவி பொது மேலாளர் அன்புமலர் ஆகியோர் இருந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “இப்புதிய சேவை மூலம் சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் பணப்பரிவர்த்தனை அற்ற அலுவலகங்களாக மாறுகிறது.
பத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் தங்கள் பதிவு கட்டணத்தை நெட் பேங்கிங், கூகுள் பே, போன்பே, பேடிஎம், ஏடிஎம் அட்டை, கிரெடிட் கார்ட் மூலம் கட்டணத்தை செலுத்தலாம். இதனை பத்திரப்பதிவிற்கு இணையத்தளத்தில் முன்பதிவு செய்யும்பொழுதே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்றனர்.