பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அலுவலா்களை, பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.
அவிநாசி, சூளையில் வாடகை கட்டடத்தில் இயங்கும் சாா் பதிவாளா் அலுவலகத்தில் அமைச்சா் பி. மூா்த்தி புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அரசுக்கு இழப்பீடு செய்யும் வகையில் பத்திரப் பதிவு நடைபெறக் கூடாது. குறிப்பாக பொதுமக்களை அலைக்கழிக்காமல் தாமதம் இன்றி பத்திரப் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, அவிநாசி கிழக்கு வீதியில் முன்பு செயல்பட்டு வந்த பழமையான சாா் பதிவாளா் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களை புனரமைப்பதுடன், மீதமுள்ள காலி இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடுதல் கட்டடங்கள் அமைத்து சாா் பதிவாளா் அலுவலகத்தை செயல்படுத்த வேண்டும் பத்திர எழுத்தா்கள், நல்லது நண்பா்கள் அறக்கட்டளையினா் உள்ளிட்டோா் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.
பழமையான சாா் பதிவாளா் அலுவலகத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா்.
ஆய்வின்போது, அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.