செய்தியாளர் சந்திப்பில் இதை ஒரு கேள்வியாகவும் அவரிடம் கேட்டனர். ‘இந்த படத்தை எடுத்துட்டா ஒரே நாள்ல எப்படி மாறிட்டான் பாருங்கன்னு நீங்களே பேசுவீங்களே…’ என கொஞ்சம் நகைச்சுவையாக தனக்கிருக்கும் நெருடலையும் சங்கடத்தையும் வெளிக்காட்டியிருந்தார்.
அதேமாதிரி, ‘அதிமுக கரை வேட்டியை கட்டக்கூடாது என்றுதான் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். படம் வைக்கக்கூடாது என அவர்களால் சொல்ல முடியாது. தவெகவும் ஒரு ஜனநாயக இயக்கம். அதில் யாருடைய படத்தை வேண்டுமானாலும் வைக்கலாம்.’ என எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சென்டிமென்டையும் விடாமல் பேசினார்.

அதேமாதிரி, பத்திரிகையாளர் சந்திப்பின் தொடக்கத்தில் ஆதவ் தவெக துண்டை செங்கோட்டையனின் தோளில் போட்டுவிடுவார். அப்போதும் அதை மறுத்து எடுத்துவிடுவார். இத்தனைக்கும் செங்கோட்டையன் பின்னால் நின்று கொண்டிருந்த அவரின் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் தோளில் தவெக துண்டுடனேயே நின்று கொண்டிருந்தனர். துண்டை மறுத்துவிட்டு, ‘வேணாம்ப்பா… கிண்டலடிப்பாங்க.. ‘ என்றும் ஆதவ்விடம் கூறியிருப்பார். அரைநூற்றாண்டாக அதிமுக கரை வேட்டி கட்டியவர், திடீரென தவெக துண்டை தோளில் போட்டுக் கொண்டால் அதிமுக அபிமானிகளால் தான் எப்படி பார்க்கப்படுவோம் என்கிற தவிப்பு செங்கோட்டையனிடம் இருந்ததையும் அறிய முடிந்தது.