பனையூர் பார்ட்டி லீடரின் அணுகுமுறைகளில் இப்போது பெரிய அளவில் மாற்றம் தெரிகிறதாம். ‘நெரிசல்’ சம்பவத்துக்குப் பிறகு களத்தில் இருந்து காரியமாற்றி இருக்க வேண்டிய ‘மகிழ்ச்சி’ மனிதரை, எங்காவது ‘எஸ்கேப்’ ஆகிவிடும் படி ‘புஸ்’ பண்ணியது கட்சியின் ‘ஆரோக்கிய’ புள்ளிதானாம். இதை நம்பி அவர் பதுங்கு குழிக்குள் பதுங்கிக் கொண்டது பனையூர் தலைவரின் அரசியல் பிரவேசத்தையே கேலிக்குரியதாக்கும் வகையில் விமர்சனங்களை கிளப்பிவிட்டதாம்.
இதனால் கட்சியின் அடுத்தகட்ட நிர்வாகிகளும் என்ன செய்வது… யாரைக் கேட்பது என்று தெரியாமல் முடங்கிப் போனார்களாம். இந்த விஷயத்தை எல்லாம் தாமதமாக புரிந்து கொண்ட பனையூர் பார்ட்டி லீடர், சமீபத்தில் ‘மகிழ்ச்சி’ மனிதரை அழைத்து செம டோஸ் விட்டாராம். தலைவரிடம் இருந்து இதுவரை இப்படியான வசவுகளைக் கேட்டுப் பழக்கமில்லாத ‘மகிழ்ச்சி’ மனிதர், இதையெல்லாம் தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகள் சிலரிடம் சொல்லி கண்கலங்கினாராம்.
இதுவரை ‘மகிழ்ச்சி’ மனிதரிடமே அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு அவர் சொல்வதை மட்டுமே வேதவாக்காக எடுத்துக்கொண்ட பனையூர் பார்ட்டி லீடர், இப்போது மாவட்டச் செயலாளர்கள் வரைக்கும் பேசி கருத்துக் கேட்கிறாராம். கட்சியை வழிநடத்த நிர்வாகக் குழுவை அமைத்தது கூட இனியும் ‘மகிழ்ச்சியை’ நம்பிக் கொண்டிருந்தால் இன்னும் அநியாயத்துக்கு வாங்குப்பட்டுப் போவோம் என்பதால்தானாம்!