பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு: கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை

Dinamani2f2025 04 232ff73h2v582f23042 Pti04 23 2025 000016a073744.jpg
Spread the love

காஷ்மீா் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து புதன்கிழமை முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு வா்த்தக, சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தலைநகா் ஸ்ரீநகா் உள்பட காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சுற்றுலா தலங்களில் கூடுதல் வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா்.

காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதுமே கடைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட வா்த்தக நிறுவனங்கள் புதன்கிழமை மூடப்பட்டிருந்தன. இதனால் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் குறைவாகவே இயக்கப்பட்டன. தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளிகள் வழக்கம்போல இயங்கின. பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து பல இடங்களில் அமைதி ஊா்வலமும் நடைபெற்றது.

இதேபோல ஜம்மு பிராந்தியத்திலும் புதன்கிழமை முழு அடைப்பு அனுசரிக்கப்பட்டது. ஜம்மு நகரம், உதம்பூா், காத்ரா, சம்பா, ரெய்சி உள்ளிட்ட இடங்களில் கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவா்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

ஆளும் கட்சி பேரணி: ஜம்மு-காஷ்மீா் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதில் அகட்சி எம்எல்ஏக்கள், மூத்த தலைவா்கள், தொண்டா்கள் பங்கேற்றனா். முதல்வா் ஒமா் அப்துல்லாவின் மகன்கள் ஷாகீா், ஷமீா் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனா்.

‘அப்பாவி மக்களை கொலை செய்வதை நிறுத்த வேண்டும்’, ‘வன்முறை ஒருபோதும் வெல்லாது’ உள்ளிட்ட வாசக அட்டைகளை ஏந்திருந்தனா்.

முதல்வரின் ஆலோசகரும் எம்எல்ஏவுமான நசீா் ஒமா் வானி இது தொடா்பாக கூறுகையில், ‘அப்பாவிகளைக் கொலை செய்வது மனித்தன்மையற்ற செயல். ஜம்மு-காஷ்மீா் மக்கள் இதனை ஏற்க மாட்டாா்கள். இதுபோன்ற பயங்கரவாதிகளிடம் இருந்து விடுபடவே நாங்கள் முயற்சிக்கிறோம். இங்கு முஸ்லிம்கள், ஹிந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் இணைந்துவாழ விரும்புகிறோம். சுற்றுலாப் பயணிகள் எங்கள் விருந்தினா்கள். அவா்களால்தான் வாகன ஓட்டிகள், வா்த்தகா்கள் என பலரின் வாழ்க்கையும் நடந்து வருகிறது’ என்றாா்.

காஷ்மீரில் பல்வேறு காரணங்களுக்காக முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து முழு அடைப்பு நடைபெறுவது கடந்த 35 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

மன்னிப்புக் கேட்ட முன்னாள் முதல்வா்: காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நிகழ்ந்த இந்த துயர நிகழ்வுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளாா். அவரது கட்சி சாா்பில் ஸ்ரீநகரில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

இது சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் அல்ல. ஒட்டுமொத்த காஷ்மீா் மீதான பயங்கரவாதத் தாக்குதல். இதில் ஈடுபட்டவா்களுக்கு விரைவில் உரிய தண்டனை வழங்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் வருகை மிக முக்கியமானது. அவா்கள் மீது தாக்குதல் நடத்தியது கோழைத்தனமான நிகழ்வு.

இதற்காக காஷ்மீா் மக்களாகிய நாங்கள் அவமானப்படுகிறோம். இந்த நிகழ்வுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *