பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா? திருப்பூரில் சிக்கிய 6 வங்கதேசத்தினர்; பின்னணி என்ன? | Are they linked to terrorist organizations? 6 Bangladeshis trapped in Tiruppur; What is their background?

Spread the love

நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில், சமூக வலைத்தளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துகள் பதிவிட்டு வந்ததை டெல்லி கியூ பிராஞ்ச் போலீஸார் கண்டறிந்தனர்.

அவர்கள் யாரென்று ஆய்வுசெய்தபோது, திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க திருப்பூர் வந்த டெல்லி கியூ பிராஞ்ச் போலீஸார், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸாரின் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, நேற்று அதிகாலை ஊத்துக்குளி பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என 6 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் 6 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்த மிஜானுர் ரகுமான் (33) , முகமது சபாத் (34), உமர் (29), முகமது லிடான் (30), முகமது ஜாகித் (28), முகமது உஜ்ஜால் (29) என்பது தெரியவந்தது.

தொழிலாளர்கள் என்ற போர்வையில் திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகளை பறிமுதல் செய்த டெல்லி போலீஸார் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லி அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் உள்ளனரா?, வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா? போன்றவை குறித்தும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். திருப்பூரில் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *