பின்னர், பெஹல்காம் சம்பவம் குறித்து உயர்நிலைக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்பட மோடி, தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீநகருக்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதன்க்கிழமை காலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நிலையில், அனந்த்நாக் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்ற நிகழ்வில் இறந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது, மேலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி உள்பட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், பெஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக ஜம்முவில் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பாஜக தலைவர்களுடன் சேர்ந்து புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒற்றுமையையும், தாக்குதலைக் கண்டித்தும், அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.