திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. தமிழகமே விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யை தவிர அத்தனை அரசியல் கட்சியினரும் கருத்து கூறிவிட்டனர். விஜய் பாஜக-வை கொள்கை எதிரி என்றார். திமுக-வை அரசியல் எதிரி என்றார். ஆனால், இருதரப்பும் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த விவகாரத்தில் விஜய் எந்தக் கருத்தையும் கூறாமல் இருப்பதால் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களுமே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். விஜய்யின் அமைதிக்கான காரணம் என்னவென்பதை விசாரித்தோம்.

திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு சில மீட்டர்கள் தூரத்தில் தீபம் ஏற்றுவோம் என பாஜக மற்றும் சில இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்ற உத்தரவோடு போர்க்கொடி தூக்க, காவல்துறையினர் மேல்முறையீட்டை காரணங்காட்டி அவர்களை தடுத்து நிறுத்தியிருந்தனர். இந்த விவகாரம்தான் கடந்த இரண்டு நாட்களாக ஹாட் டாபிக்.
நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்தும் எதிர்த்தும் ஏனைய கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை உறுதியாக பேசி வருகின்றனர். ஆனால், விஜய் இதுவரைக்கும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. விஜய் மட்டுமல்ல, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர், அருண் ராஜ் என தவெகவின் முக்கிய நிர்வாகிகள் யாருமே திருப்பரங்குன்றம் குறித்து வாய் திறக்கவில்லை. யாருமே ஒரு ட்வீட் கூட போடவில்லை.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் தரப்பு மௌனம் காப்பது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரியில் திருப்பரங்குன்றம் மலை அருகே இந்துத்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அது பெரிய பேசுபொருளான போதும் விஜய் ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை. அப்போதும் விஜய் தரப்பு முழுமையாக அமைதியாகவே இருந்தது.
இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சு கொடுத்தோம். ‘தமிழகமே பற்றி எரிந்துகொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் நாமும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து களமாட வேண்டும் என்றும்தான் தலைமைக்கு தெரியப்படுத்தினோம். ஆனால், தலைமை இந்த விவகாரத்தை வேறு விதமாக பார்க்கிறது.
எங்கள் தலைவரை பாஜகவினர் ஏற்கனவே ஒரு காலக்கட்டத்தில் ‘ஜோசப் விஜய்’ என மதரீதியாக அட்டாக் செய்திருக்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் இரண்டு மதங்கள் சம்பந்தப்பட்டது. இதில் எதோ ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதை பாஜக எங்களுக்கு எதிராக மதரீதியான தாக்குதலாக மாற்றும் வாய்ப்பை கொடுத்துவிடக் கூடாது. அதனால்தான் தலைமையிலிருந்து நிர்வாகிகள் எல்லாரையும் இந்த விவகாரத்தில் கொஞ்சம் அமைதியாக இருக்கும்படி கூறியிருக்கின்றனர்.

அடுத்த சில நாட்கள் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் எப்படி செல்கிறது என்பதைப் பார்த்துவிட்டு தலைவர் விளக்கமாக ஒரு அறிக்கையை கொடுப்பார்’ என்றனர்.
‘ஜோசப் விஜய்’ என பாஜக வண்டியை விஜய் பக்கமாகவே திருப்பி விடுவார்களோ என விஜய்யின் வியூக தரப்பு தயங்குகிறதாம். மேலும், இந்த திருப்பரங்குன்றம் விவகாரமே திமுக, பாஜகவும் இணைந்து தவெகவுக்கும் விரித்திருக்கும் வலை என்கிற ரேஞ்சுக்கு யோசித்து வியூக தரப்பு பம்முகிறதாம். அதை ஏற்றுக்கொண்டதால்தான் விஜய்யும் கனத்த மௌனம் காக்கிறாராம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர்ச்சியான அமைதி, கவின் குமார் ஆணவப்படுகொலை விவகாரத்தில் ஒரு ட்வீட் கூட போடாமல் நழுவிய சம்பவங்களால் தவெகவின் முக்கிய நிர்வாகிகளே கொஞ்சம் நெருடலாக உணர்கிறார்களாம்.

இப்படியெல்லாம் அலட்சியமாக இருந்துவிட்டு நாளை பிரசாரத்தில் தலித், சிறுபான்மையினர் பிரச்னைகள் குறித்து பேசினால் எப்படி எடுபடும் என தங்களுக்குள் ஆதங்கமும்பட்டுக் கொள்கிறார்கள். விஜய்யின் அமைதியை வைத்து மற்றக் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவரை ட்ரோல் செய்தும் வருகின்றனர். இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்படும் வியூக தரப்புக்கு எதிராக வெளிப்படையாக பேச முடியாமல் முணுமுணுப்போடு கடந்து செல்கின்றனர் முக்கிய நிர்வாகிகள் சிலர்.