புதுதில்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் பயணம் செய்து வருகின்றனர். ஏழை எளிய, நடுத்தர மக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக ரயில்கள் விளங்குகின்றன. ரயில் பயணங்கள் போது பயணிகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பயணிகள் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை சோதனை முறையில் நிறுவியதன் அடிப்படையில், அதில் கிடைத்த நேர்மறையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொறுத்துவதற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தவும், குற்றவாளிகள், திட்டமிட்ட குற்றங்களைச் செய்யும் கும்பல்களின் மோசடிச் சம்பவங்கள் கணிசமாகக் குறையும். பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக,ரயில் பெட்டியின் கதவுகளுக்கு அருகில் உள்ள பொதுவான இயக்கப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்.
ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் சனிக்கிழமை(ஜூலை 12) ஆய்வு செய்தனர்.
ஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, வடக்கு ரயில்வேயின் ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளில் சோதனை முறையில் நிறுவப்பட்ட கேமராக்களில் கிடைத்த நேர்மறையான விளைவுகளின் அடிப்படையில், 74 ஆயிரம் ரயில் பெட்டிகள் மற்றும் 15 ஆயிரம் லோகோமோடிவ்களில் கேமராக்களை பொறுத்துவதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.