சென்னை: சவூதி அரேபியா ஜெட்டா நகரில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு 290 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. சென்னை வான் வெளியை கடந்து நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அந்த பயணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்த விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதி அளித்தனர். இதையடுத்து, நேற்று அதிகாலை 4.45 மணிக்கு சென்னையில் விமானம் தரையிறங்கியது.
தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை அவருக்கு வழங்கினர். பின்னர், பெண் பயணி சகஜ நிலைக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து, அதிகாலை 5.40 மணிக்கு, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.