பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நாளை நமதே என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விஜய் பதிவிட்டுள்ளதாவது,
”மண்ணுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக ஆயிரம் நாள்களைக் கடந்து அறப்போராட்டம் நடத்தி வரும் என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே!” எனப் பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான மக்களின் போராட்டம் 1,000வது நாளை எட்டியுள்ளது.
பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் அதனைச் சுற்றியுள்ள பல ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் என்றும், நீர் நிலைகள் அழிந்து சுற்றுச்சூழல் பாதிக்கும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஆயிரம் நாள்களைக் கடந்துள்ளது.
இதையும் படிக்க | ஜப்பானில் கனிமொழி – நெப்போலியன் சந்திப்பு!