பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பு பணி தொடக்கம்: போராட்டக் குழு கடும் கண்டனம் | Land acquisition work for Parandur Airport begins Protest group condemns

1368808
Spread the love

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் 17.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க 2023 அக்டோபர் 31-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதன்படி நில மதிப்பு மறு நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் ஜூன் 25-ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

தொடர்ந்து, பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் கிராமங்களைச் சேர்ந்த 19 பேரிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களது 17.52 ஏக்கர் நிலத்தை வழங்க அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். மேலும், ரூ.9.22 கோடி மதிப்பிலான நிலத்தை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு பதிவு செய்து கொடுத்தனர். நில உரிமைதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை உடனடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கைக்கு பரந்தூர் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அக்குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலாளர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விட்டுக் கொடுக்க மாட்டார்கள்… பரந்தூர் புதிய விமானநிலைய திட்டத்தை கைவிடுமாறு 3 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், மக்களிடம் ஆலோசிக்காமலும், முறையான ஆய்வுகள் நடத்தாமலும், வேளாண் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடுவது, பண மதிப்பீட்டுக்கான அரசாணை வெளியிடுவது போன்ற தவறான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

என்ன செய்தாலும் பரந்தூர் விவசாயிகள் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், நிலத்தில் முதலீடு செய்துள்ள வெளியூர் ஆட்களை அழைத்துவந்து, அவர்களது நிலங்களை பத்திரப்பதிவு செய்து வருகிறது. விவசாயிகள் நிலங்களை கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு முயற்சிப்பதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழக அரசின் இந்த ஜனநாயக படுகொலை செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக, அனைத்து அரசியல் கட்சிகளின் துணையுடன் பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். சட்டப் போராட்டத்துக்கான முன்னெடுப்பு சில நாட்களில் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *