பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் மீண்டும் கிராமங்களில் பரவுவதால் பதற்றம் | Protest against Parandur Airport

1370558
Spread the love

காஞ்சிபுரம்: ஏக​னாபுரத்தை மைய​மாக வைத்து நடை​பெற்று வந்த பரந்​தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்​டம் விரிவடைந்து நேற்று வளத்​தோட்​டம் பகு​தி​யில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற பொது​மக்​கள் பரந்​தூர் விமான நிலை​யத் திட்டத்தை கைவிட வேண்​டும் என்று வலி​யுறுத்தி கோஷங்​களை எழுப்​பினர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூர் சுற்​று​வட்​டார கிராமங்​களை உள்​ளடக்கி பசுமை வெளி விமான நிலை​யம் அமைக்க மத்​திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றன.

பரந்​தூர் மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள 13 கிராமங்​களில் இருந்து 5300 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​தப்பட உள்​ளது. ஏகா​னாபுரம் உள்​ளிட்ட சில கிராமங்​கள் முழு​மை​யாக கையகப்​படுத்​தப்பட உள்​ளன. விவசாய நிலங்​கள், வீடு​கள், மனை​கள், ஏரி, குளங்​கள் என பல்​வேறு வகை​யான நிலங்​கள் இந்த விமான நிலை​யத்​துக்​காக கையகப்​படுத்​தப்பட உள்​ளன.

இந்த விமான நிலை​யம் அமைப்​ப​தற்​கான இடங்​களை தேர்வு செய்து நிலம் கையகப்​படுத்​தும் பணி​களை தமிழ்​நாடு தொழில் முதலீட்டு கழகம் எடுத்து வரு​கிறது. இந்த அமைப்பு சார்​பில் அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்​டு, பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

புதிய விமான நிலைய திட்​டத்​துக்​காக நிலங்​களை கையகப்​படுத்தி பத்​திரப் பதிவு செய்​து, நில உரிமை​யாளர்​களின் வங்கி கணக்​கில் பணம் வரவு வைக்​கும் முயற்​சியை விமான நிலைய திட்ட அதி​காரி​கள் எடுத்து வரு​கின்​றனர். இது​வரை 19 பேரிடம் இருந்து நிலங்​கள் வாங்​கப்​பட்​டுள்​ளன. நிலங்​கள் வாங்​கப்​பட்​டதைத் தொடர்ந்து போராட்​டம் தீவிரமடைந்​தது.

தங்​கள் கோரிக்​கைக்கு மதிப்​பில்லை என்று கூறி ஏகனாபுரம் பொது​மக்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இவர்​களுக்கு பல்வேறு அரசி​யல் கட்​சிகள் ஆதரவு தெரி​வித்து வரு​கின்​றனர். சட்​டப்​போ​ராட்​டம் நடத்​து​வதற்​கான நடவடிக்​கை​களி​லும் போராட்டக் குழு​வினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

விரிவடை​யும் போராட்​டம்: பரந்​தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்​டக் குழு, ஏகனாபுரத்​தில் நடத்தி வரும் போராட்​டம் 1,095-வது நாளை எட்​டி​யுள்ள நிலை​யில் வளத்​தோட்​டம் மக்​களும் போராட்​டத்தை தொடங்​கி​யுள்​ளனர். 200-க்​கும் மேற்பட்​டோர் இந்​தப் போராட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

போராட்​டத்​தில் பங்​கேற்​றவர்​கள் விமான நிலை​யத் திட்​டத்தை கைவிடக்கோரி கோஷங்​களை எழுப்​பினர். இந்​தப் போராட்​டத்​தில் ஏகனாபுரம் மக்​கள் மற்​றும் போராட்​டக் குழு​வினர் உட்பட பலர் பங்​கேற்​றனர். அரசி​யல் கட்சி நிர்​வாகி​களும் பங்​கேற்​றனர்.

இது குறித்து இந்​தப் பகுதி பொது​மக்​கள் கூறும்​போது, “இந்த நிலத்தை நம்​பி​தான் எங்​கள் வாழ்​வா​தா​ரம் உள்​ளது. எங்​களை இங்கிருந்து அப்​புறப்​படுத்த முடி​யாது. நாங்​கள் தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​படு​வோம். உயிரை கொடுத்​தாவது எங்​கள் இடத்தை பாது​காப்​போம்” என்​றனர். இந்​தப் போராட்​டம் காரண​மாக காஞ்​சிபுரம், பரந்​தூர் மற்​றும் சுற்​று​வட்​டார கிராமப் பகுதிகளில் பதற்​றம் நிலவியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *