திருப்பரங்குன்றம் கோயிலில் மோடி சாமி தரிசனம்
பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதியன்றும், மார்ச் 1-ந்தேதியன்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். 28-ந்தேதியன்று இரவு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் மார்ச் 1-ந்தேதியன்று ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து பிரதமர் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மதுரையில் நடக்கும் பொதுகூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கிறார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் பிரதமர் செல்கிறார். பின்னர் மார்ச் 1-ந்தேதியன்று இரவு பிரதமர் தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்கிறார். பிரதமர் சென்னை வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
விஜயை சந்திக்க ராகுல் திட்டம்?
கடந்த ஜனவரி மாதமே ராகுல் காந்தி சென்னை வருவதாக இருந்த நிலையில் கூட்டணி உறுதி செய்யப்படாததால் அந்த திட்டமிடல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வருகிற மார்ச் 5-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் ராகுல் காந்தி, நடிகர் விஜய்யுடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு தரவும், 5 முதல் 6 அமைச்சரவை பதவிகள் வழங்கவும், மேலும் பல பொறுப்புகளை வழங்கவும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் கட்சி காங்கிரசுக்கு 100 இடங்கள் வரை கூட வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது காங்கிரசை பலப்படுத்தும் ஒரே வழி என்று ராகுல் காந்தி கருதுவதாக தெரிகிறது. இதற்கு இணையாக தி.மு.க.வும் சலுகையை வழங்க வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
