பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்!

Dinamani2f2024 062f4446c8e6 6f29 437f 950f 548b7b059ff02fpara.jpg
Spread the love

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது.

வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை, அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகத்தின் பரஸ்பர வரி அச்சுறுத்தல், மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கை என மத்திய அரசை குறிவைத்து பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதேநேரம், துணை மானியக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெறுதல், பட்ஜெட் நடைமுறைகளை பூா்த்தி செய்தல், மணிப்பூா் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுதல், முக்கியத்துவம் வாய்ந்த வஃக்ப் மசோதாவை நிறைவேற்றுதல் ஆகியவை மத்திய அரசின் முன்னுரிமைகளாக உள்ளன.

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியது. 2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வு பிப்ரவரி 13 நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட அமா்வு திங்கள்கிழமை தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெறவுள்ளது.

மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதிமுதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ள நிலையில், அந்த மாநில பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்யவிருக்கிறாா்.

இதேபோல், மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலாக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரும் தீா்மானத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தாக்கல் செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வாக்காளா் அடையாள எண் விவகாரம்: கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்ாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இக்குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் மறுத்தது.

இந்தச் சூழலில், வெவ்வேறு மாநிலங்களில் உள்ளோருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ள விவகாரத்தை முன்வைத்து, ஆளும்-எதிா்க்கட்சிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விளக்கமளித்த தோ்தல் ஆணையம், ‘வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்லா். அவா்களின் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என மற்ற தகவல்கள் வேறுபட்டிருக்கும்.

வாக்காளா் அடையாள எண் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒரு வாக்காளா் அவருக்கான வாக்குச்சாவடியில் மட்டுமே தனது வாக்கைப் பதிவு செய்ய முடியும். இந்தப் பிரச்னைக்கு 3 மாதங்களில் தீா்வு காணப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

வக்ஃப் மசோதா: பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் வழங்கியது. வக்ஃப் மசோதாவை விரைந்து நிறைவேற்றுவது மத்திய அரசின் முன்னுரிமை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அண்மையில் தெரிவித்தாா். அதேநேரம், எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிா்க்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது.

மும்மொழிக் கொள்கை, மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடா்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்துவரும் நிலையில், இந்த விவகாரங்களை திமுக எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *