இந்தி எதிர்ப்பு – இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் பேசுகின்றன சுட்டெரிக்கும் வசனங்கள். ஆனால், அரசியல் கொள்கைகள், அதைப் பேசிய தலைவர்கள், அதற்காகப் போராடிய இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பங்களிப்புகள், அரசியல் ரீதியாக மக்கள் போராட்டங்களின் ஒன்றிணைந்தது போன்றவை இலைமறைகாயாக ஆங்காங்கே மட்டும் தலைகாட்டுகின்றன. அவை வசனங்களிலும், காட்சிகளிலும் மிஸ்ஸிங்! இதனால், மாணவர்களின் சில தன்னெழுச்சிப் போராட்டங்கள் அதீத வன்முறைக் காட்சிகளாக மட்டுமே நிற்கின்றன.

அறிஞர் அண்ணாவிடம் பேனாவைப் பரிசாக வாங்கியதோடு மட்டுமல்லாமல், ‘அண்ணா… அண்ணா..’ என அவரை நினைவூட்டியபடியே பேசும் கதாபாத்திரம், அறிஞர் அண்ணாவின் அரசியலைப் பற்றி துளிகூட பேசாதது ஏனோ?! மொழி உரிமைக்காக நிகழ்ந்த மாபெரும் மாணவப் புரட்சிப் போராட்டத்தை ‘ஹீரோ – வில்லன்’ சண்டையாக மாற்றி, அதற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது உறுத்தலே!
ஆக்ஷன், எமோஷன் என மாறி, மாறி இறுதிக்காட்சி நீண்டாலும், கமெர்ஷியலாக கச்சிதமாக முடிகிறது படம். கதாநாயகனின் அதீத ஹீரோயிஸம், லாஜிக்கில்லாத சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மையில்லாத இறுதித் திருப்பம் போன்றவை கச்சிதத்தைக் கலைக்க முயன்றாலும், கௌரவக் கதாபாத்திரங்களில் தலைகாட்டும் நடிகர்களின் ஆவேசம், மனதைக் கனக்க வைக்கும் எமோஷன் காட்சிகள், சுவாரஸ்ய ட்விஸ்ட்கள் என ஏனையவை கைகொடுக்க, கச்சிதமான க்ளைமேக்ஸாக க்ளாப்ஸ் வாங்குகிறது படம்.