திருவள்ளூர் அருகே உள்ள பூண்டி ஏரியில் பராமரிக்கப்படாத மதகுகள் வழியாக நீர் கசிந்து வீணாகி வருவதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் பரப்பளவு 121 கி.மீ ஆகும். மொத்தம் 35 அடி உயரம் கொண்ட இதில் 3,231 மில்லியன் கன அடி வரையில் நீர் சேமித்து வைக்கலாம்.
இந்த ஏரியில் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் அணை நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் மூலம் சோழவரம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதுவே முழுக்கொள்ளளவை எட்டினால் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 16 மதகுகள் வழியாக உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும்.
இந்நிலையில், மதகுகள், மோட்டார் சேதமடைந்த நிலையில் கடந்தாண்டு கனமழைக்கு முன்னதாக ஏரிப்பகுதியில் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்குள் அண்மையில் கனமழை பெய்யவே ஏரிக்கு நீர் வரத்து ஏற்பட்டது. அதோடு ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை நீர் வரத்து மற்றும் கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து அதிகரித்தது.
அதைத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.கடந்த நான்கு வாரங்களாக முழு அளவில் 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி என நீர் இருப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் நீர் அழுத்தம் ஏற்பட்டு, சரியாக பராமரிக்கப்படாத மதகுகள் வழியாக நாள்தோறும் 10 கன அடிநீர் வெளியேறி வீணாகி
வருகிறது. எனவே வீணாக வெளியேறி வரும் நீரை கட்டுப்படுத்தும் வகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.