அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பர்கர் நிறுவனமான ‘ஃபைவ் கைஸ்’ (Five Guys), தனது ஊழியர்களுக்கு சுமார் 1.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹15 கோடி) போனஸ் வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளது.
நிறுவனத்தின் சிறப்புச் சலுகை ஒன்றினால் ஏற்பட்ட எதிர்பாராத வாடிக்கையாளர் கூட்டத்தையும், அதனால் உண்டான நெருக்கடிகளையும் சிறப்பாகக் கையாண்ட ஊழியர்களைப் பாராட்டும் விதமாக இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைவ் கைஸ் நிறுவனம் தனது 40வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 17 அன்று ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சிறப்புச் சலுகையை அறிவித்தது. ஆனால், இந்தச் சலுகைக்குக் கிடைத்த வரவேற்பு, நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளைப் பல மடங்கு இருந்தது. அமெரிக்கா முழுவதும் உள்ள ஃபைவ் கைஸ் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியதால், பெரும் குழப்பமும் நெருக்கடியும் ஏற்பட்டது.

தி நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, திடீரென குவிந்த வாடிக்கையாளர் கூட்டத்தால் பல கடைகளில் உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. ஆன்லைன் ஆர்டர் செய்யும் அமைப்புகளிலும் சிக்கல் ஏற்பட்டது. நிலைமையைச் சமாளிக்க முடியாமல், பல கடைகள் அன்றைய தினம் முன்கூட்டியே மூடப்பட்டன. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், ஊழியர்கள் நீண்ட வரிசைகளையும், அதிகப்படியான ஆர்டர்களையும் கையாண்டு தங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்களாம்.
இந்த நிகழ்வு குறித்து ஃபார்ச்சூன் பத்திரிகையிடம் பேசிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெர்ரி முரெல், “வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அளவை நாங்கள் தவறாகக் கணித்துவிட்டோம். முதல் நாளுக்குப் பிறகு யாரும் என்னை கொன்றுவிடக் கூடாது என்று நினைத்தேன், ஏனென்றால் நாங்கள் உண்மையில் சொதப்பிவிட்டோம். இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை,” என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
ஊழியர்களின் அசாத்தியமான உழைப்பையும், நெருக்கடியை அவர்கள் கையாண்ட விதத்தையும் அங்கீகரிப்பதற்காகவே இந்த போனஸ் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிறுவனம் பணியாளர்களைப் பாராட்டி வெளியிட்ட அறிக்கையில், “ஊழியர்களின் இந்த முயற்சி, பல தசாப்தங்களாக எங்கள் நிறுவனத்தின் அடையாளமாக இருக்கும் அர்ப்பணிப்பையும், மன உறுதியையும் பிரதிபலிக்கிறது,” என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் தேவையை சிறப்பாகக் கையாளும் வகையில் மேம்பட்ட திட்டமிடலுடன், மார்ச் 9 முதல் 12 வரை அதே சலுகையை ஃபைவ் கைஸ் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.