’தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தன்னை நீக்கியதுடன், அங்கு பல பேர் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்தார்கள்” என மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்த தயாரிப்பாளர் ராஜேஸ்வரி மனு மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்.
ராஜேஸ்வரி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் இருவர் மீதும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக இரு தரப்புக்கும் சம்மன் அனுப்பி விசாரித்த நிலையில், நேற்று ஆணையம் தனது இறுதித் தீர்ப்பை வழ்ங்கியுள்ளது.

பதிவுத்துறை இயக்குனருக்கு அனுப்பியிருக்கும் பரிந்துரையில், `சங்கங்களில் பெண்களின் சுதந்திரம் மற்றும் மாண்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி’ கூறியுள்ளது.
சினிமா கட்டுப்பாட்டில் வரும் செய்தி மற்றும் விளம்பரத் துறை செயலாளருக்கும் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்துள்ளது.
ராஜேஸ்வரி மகளிர் ஆணையத்தில் அளித்த புகார் தொடர்பாக ஏற்கனவே விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
’சுமார் 100 பேர் முன்னிலையில் மன்னிப்பு கேட்கச் சொன்னாங்க. நானும் மன்னிப்பு கேட்டேன்’ எனக் கண் கலங்க நம்மிடம் பேசியிருந்தார் அவர்.
தற்போது ஆணையத்தில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கும் சூழலில் அவருடன் பேசினோம்.